/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள், சம்பளம்... குறைப்பு :ஊராட்சிகளில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
/
100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள், சம்பளம்... குறைப்பு :ஊராட்சிகளில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள், சம்பளம்... குறைப்பு :ஊராட்சிகளில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
100 நாள் வேலை திட்டத்தில் பணியாளர்கள், சம்பளம்... குறைப்பு :ஊராட்சிகளில் ஏழை மக்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
ADDED : ஜூலை 04, 2025 02:34 AM

கடம்பத்துார்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களுக்குட்பட்ட 526 ஊராட்சிகளில் நுாறு நாள் பணியாளர்கள் எண்ணிக்கை 200லிருந்து, 20 ஆகவும் 300 ரூபாய் சம்பளம் 150 ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளதால் ஏழை, எளிய மக்கள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு சிரமப்பட்டு வருகின்றனர்.
கிராமப்புற மக்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ம் ஆண்டு மத்திய அரசால் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் எனும் நுாறு நாள் வேலைவாய்ப்பு திட்டம் கொண்டு வரப்பட்டது.
இதன் மூலம் ஊரக பகுதிகளில் குளம் வெட்டுதல், துார்வாருதல், ஏரிக்கரைகளில் மரக்கன்றுகள் நடுதல் மற்றும் அரசின் தொகுப்பு வீடு கட்டுதல் உள்ளிட்ட பணிகள் நடந்து வருகின்றன.
உழைப்பு
இத்திட்டத்தின் கீழ் ஊராட்சியில் பதிவு செய்து கொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் நுாறு நாட்களுக்கு உடல் உழைப்பு சார்ந்த வேலைகள் தரப்படுகின்றன. இத்திட்டம் மூலம் நாடு முழுதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.
இந்த நுாறு நாள் வேலை வாய்ப்பு திட்டம் 180 ரூபாய் ஊதியத்துடன் 2006ம் ஆண்டு துவக்கப்பட்ட நிலையில் படிப்படியாக உயர்ந்து தற்போது 294 ரூபாயாக ஊதிய உயர்வு அடைந்து உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகள் உள்ளன. இதில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் 526 ஊராட்சிகளில் தலா 200 பணியாளர்கள் வீதம் 1.05 லட்சத்து 200 பேர் பணிபுரிந்து வந்தனர்.
இதில் பெரும்பாலானோர் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள்.
இவர்களுக்கு தினமும் 280 ரூபாய் முதல் அதிகபட்சமாக 320 ரூபாய் வரை என மாதம் 9,000 ரூபாய் வரை சம்பளமாக வழங்கப்பட்டது.
கடந்த நவம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை நான்கு மாதங்களாக சம்பளம் வழங்கப்படாத நிலையில் தற்போது சம்பளம் வழங்கப்பட்டுள்ளது.
முடக்கம்
இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களாக வேலையில்லாமல் பயனாளிகள் வீடுகளில் முடங்கி கிடந்த நிலையில் தற்போது நுாறு நாள் பணிகள் மீண்டும் துவங்கியுள்ளது.
தற்போது ஊராட்சிக்கு 20 பேர் மட்டும் பணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் இவர்களுக்கான ஊதியமும் குறைக்கப்பட்டு 150 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் கிராமப்பகுதிகளில் நுாறு நாள் பணி மேற்கொள்ளும் ஏழை மக்களின் வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பணியாளர் குறைப்பு, சம்பளம் குறைப்பு குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர்களிடம் புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கவில்லை என, நுாறு நாள் திட்ட பணியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
கோரிக்கை
எனவே, மாவட்ட நிர்வாகம் நுாறு நாள் திட்ட பணிகளுக்கு கூடுதல் பணியாளர்களை நியமித்து வழக்கமான சம்பளம் வழங்கி வாழ்வாதாரத்தை காப்பாற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது மகாத்மா காந்தி நுாறு நாள் வேலை திட்டத்தில் விடுபட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறோம்.
'இதனால் குறைந்த அளவு பணியாளர்களைக் கொண்டு அதற்குண்டான, 150 ரூபாய் முதல் 185 ரூபாய் வரை வழங்கப்படும்.
'விரைவில் அரசு உத்தரவுக்குப்பின் புதிய பணிகள் துவங்கும் போது வழக்கம்போல் கூடுதல் பணியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழக்கமான ஊதியம் வழங்கப்படும்' என்றார்.