/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ரூ.17 கோடியில் புது பாலம் கிராமங்களுக்கு விமோசனம்
/
ரூ.17 கோடியில் புது பாலம் கிராமங்களுக்கு விமோசனம்
ADDED : பிப் 15, 2024 02:29 AM
மீஞ்சூர்:மீஞ்சூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம் உள்ளிட்ட கிராமங்களில், 740 குடியிருப்புகளில், 9,000க்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர்.
இங்குள்ளவர்கள் கல்வி, மருத்துவம், தொழில் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு பள்ளிபுரம் - கவுண்டர்பாளையம் கிராமங்களுக்கு இடையே உள்ள கொசஸ்தலை ஆற்றை கடந்து சென்று வருவர்.
இதற்காக ஆற்றின் குறுக்கே, 50 ஆண்டுகளுக்கு முன் கட்டடப்பட்ட தரைப்பாலம் ஒன்று உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில், கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது.
அச்சமயங்களில் இந்த தரைப்பாலம் மூழ்கி, 4 - 6 அடி உயரத்திற்கு மழைநீர் செல்கிறது. இதனால், இந்த கிராமவாசிகளின் போக்குவரத்து முற்றிலும் ஸ்தம்பிக்கிறது.
மேலும், இந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள், அவசர உதவி தேவை என்றாலும் வெளியேறுவதற்கு மாற்று வழி இல்லாததால், பெரும் தவிப்பிற்கு ஆளாகின்றனர். மழைக்காலங்களில் இந்த கிராமங்கள் தீவாக மாறுவதால், பெரும் இன்னலுக்கு ஆளாகின்றனர்.
கடந்த டிசம்பர் மாதமும், கொசஸ்தலை ஆற்றில், 70,000 கன அடி நீர் வெளியேறியதால், தரைப்பாலம் மூழ்கியது. கிராமவாசிகள் உணவு, மருத்துவம் உள்ளிட்ட வசதிகள் கிடைக்காமல் தவித்தனர்.
பேரிடர் மீட்புக் குழுவினர், படகுகளின் உதவியுடன் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டினர். ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், தரைப்பாலத்தை அகற்றிவிட்டு, உயர்மட்ட பாலம் அடைக்க வேண்டும் என, கிராமவாசிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதை தொடர்ந்து, தற்போது தரைப்பாலத்திற்கு மாற்றாக புதிய உயர்மட்ட பாலம் அமைக்கப்பட உள்ளது. நபார்டு நிதியுதவி திட்டத்தின் கீழ், 17 கோடி ரூபாயில் பாலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.
இந்த பாலமானது, 200 மீ., நீளம், 10 மீ., அகலத்தில் அமைய உள்ளது. இந்தாண்டு மழைக்காலத்திற்குள் பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
இதன் வாயிலாக, வெள்ளப்பெருக்கின் போது, தரைப்பாலம் மூழ்கி, ஆண்டுதோறும் தவிப்பிற்கு உள்ளாகும் சுப்பாரெட்டிப்பாளையம், பள்ளிபுரம் கிராமவாசிகளுக்கு விமோசனம் கிடைத்துள்ளது.

