/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருவள்ளூரில் குடியரசு தின விழா கோலாகலம்
/
திருவள்ளூரில் குடியரசு தின விழா கோலாகலம்
ADDED : ஜன 27, 2025 02:29 AM

திருவள்ளூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில், நாட்டின் 76வது குடியரசு தின விழா கோலாகலமாக நேற்று கொண்டாடப்பட்டது.
திருவள்ளுர் மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் நேற்று நடந்த குடியரசு தின விழாவில், கலெக்டர் பிரபுசங்கர், எஸ்.பி., சீனிவாசபெருமாள் முன்னிலையில், தேசிய கொடியை ஏற்றி, மூவர்ண பலுான் மற்றும் சமாதான புறாக்களை பறக்க விட்டார். பின், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
தொடர்ந்து, சுதந்திர போராட்ட மற்றும் மொழி போராட்ட தியாகிகளுக்கு பொன்னாடை அணிவித்தார். தொடர்ந்து காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிய 28 காவலர்களுக்கு தமிழக முதல்வர் பதக்கம்; கவரப்பேட்டை ரயில் விபத்தில் மீட்பு பணி செய்த எஸ்.பி., உள்ளிட்ட 30 காவல் துறையினருக்கு விருது வழங்கினார்.
அணி வகுப்பில் பங்கேற்ற 117 காவலர்கள், 20 முதல்நிலை அலுவலர், சிறப்பாக பணிபுரிந்த 318 அரசு அலுவலர் மற்றும் பணியாளர்களுக்கு நற்சான்றிதழ் மற்றும் கேடயங்களை கலெக்டர் வழங்கினார்.
நிகழ்ச்சியில், முன்னாள் படைவீரர் நல அலுவலகம் சார்பாக இரண்டு பேர், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், மூவர், மாவட்ட தொழில் மையம் சார்பாக 5 உள்பட, பல்வேறு துறை சார்பில் 23 பயனாளிகளுக்கு 24.79 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவியினை கலெக்டர் வழங்கினார்.
தொடர்ந்து, கும்மிடிப்பூண்டி அரசு மேல்நிலை பள்ளி, வெள்ளியூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளுர் ஆர்.எம்.ஜெயின் பள்ளி, திருநின்றவூர் செயின்ட் ஜான்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அன்னை சரஸ்வதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவ - மாணவியரின் கலை நிகழ்ச்சி நடந்தன.
திருவள்ளூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில், மாவட்ட முதன்மை நீதிபதி ஜூலியட் புஷ்பா, திருவள்ளூர் நகராட்சியில் கமிஷனர் திருநாவுக்கரசு முன்னிலையில், நகராட்சி தலைவர் உதயமலர், தேசிய கொடி ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தினர்.
உளுந்தை அரசு உயர்நிலைப் பள்ளியில் நடந்த குடியரசு தின விழாவில் பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன் தேசியக் கொடியேற்றி வைத்தார். திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில், வருவாய் கோட்டாட்சியர் தீபா தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
திருத்தணி தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் மலர்வழி, திருத்தணி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
இதே போல, திருத்தணி டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.எஸ்.பி., கந்தன், திருத்தணி நகராட்சி அலுவலகத்தில், சேர்மன் சரஸ்வதி, திருத்தணி அரசினர் கலைக் கல்லுாரியில் முதல்வர் பூரணசந்திரன் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
திருத்தணி சுதந்திர பள்ளியில், பள்ளி தாளாளர் சியாமளா ரங்கநாதன், தளபதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் தாளாளர் பாலாஜி ஆகியோர் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
திருத்தணி ஒன்றியம், மத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியர் சுரேஷ் தேசிய கொடி ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். இதில், ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி பூவேதா, 1,330 திருக்குறளையும், பிராமிய எழுத்துக்களில் எழுதி சாதனை படைத்தார்.
ஊத்துக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் நீதிபதி செந்தமிழ்செல்வன் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தினார். ஊத்துக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் அருள்வளவன் ஆரோக்கியதாஸ், போலீஸ் நிலையத்தில் ஆய்வாளர் தேவராஜ், பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலர் சதீஷ், அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், தலைமையாசிரியர் ஜெயச்சந்திரன், பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தலைமையாசிரியை செந்தில்வள்ளி ஆகியோர் தேசியக் கொடி ஏற்றினார்.
கும்மிடிப்பூண்டி பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் ஷகிலா கொடி ஏற்றினார். துணை தலைவர் கேசவன் முன்னிலை வகித்தார். டி.எஸ்.பி., முகாம் அலுவலகத்தில் டி.எஸ்.பி., ஜெய்ஸ்ரீ, தேசிய கொடி ஏற்றினார்.
ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் அலுவலகத்தில் தாசில்தார் சரவணகுமாரி, அரசு பொது மருத்துவமனையில் டாக்டர் அம்சவாஹினி ஆகியோர் தேசிய கொடி ஏற்றினர்.
பொன்னேரியில், அரசு அலுவலங்கள், நீதிமன்றங்கள், பள்ளிகளில் தேசிய கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்பட்டது. பொன்னேரி சப் - கலெக்டர் அலுவலகத்தில் சப்-கலெக்டர் வாகே சங்கேத் பல்வந்த் தேசிய கொடி ஏற்றினார்.
பொன்னேரி, டாக்டர் எம்.ஜி.ஆர்., மீன்வளக் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், முதல்வர் முனைவர் ஜெயசகிலா கொடி ஏற்றினார்.
ஊத்துக்கோட்டை அருகே, நந்திமங்களம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை, 21 மாணவ - மாணவியருக்கு பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள், பை, நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், பேடு போன்றவை வழங்கினர்.
- --நமது நிருபர் குழு-- -