/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மழைநீர் கால்வாய் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
/
மழைநீர் கால்வாய் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
மழைநீர் கால்வாய் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
மழைநீர் கால்வாய் குறுக்கே தரைப்பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜூலை 14, 2025 11:29 PM

பொன்னேரி, பழவேற்காடு ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாயின் குறுக்கே, தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, நான்கு கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மீஞ்சூர் ஒன்றியம் கள்ளூர் - வெப்பத்துார் சாலையில், பழவேற்காடு ஏரிக்கு மழைநீர் செல்லும் கால்வாய் அமைந்துள்ளது.
மழைக்காலங்களில், 5 அடி உயரத்திற்கு கால்வாயில் மழைநீர் செல்லும்போது போக்குவரத்து பாதிக்கிறது. கள்ளூர், புதுகுப்பம், சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு ஆகிய கிராமங்களைச் சேர்ந்தவர்கள், இக்கால்வாயை கடந்து வெப்பத்துார் வழியாக பழவேற்காடு பகுதிக்கு சென்று வருகின்றனர்.
மழைக்காலங்களில் கால்வாய் தண்ணீர் தேங்குவதால், மாற்று வழித்தடத்தில், 20 - 25 கி.மீ., சுற்றிக்கொண்டு பயணிக்கும் நிலை ஏற்படுகிறது. கால்வாயின் குறுக்கே தரைப்பாலம் அமைக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:
சின்னமாங்கோடு, பெரியமாங்கோடு, புதுகுப்பம் ஆகியவை மீனவ கிராமங்கள். இங்கு பிடிக்கப்படும் மீன் மற்றும் இறால்கள், பழவேற்காடு பகுதிக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகிறது.
கால்வாயில் தண்ணீர் தேங்கும் காலங்களில் தேவம்பட்டு, கோளூர் வழியாக செல்லும்போது, நேர விரயம் ஏற்படுகிறது.
இதனால், மீன், இறால்கள் வீணாகின்றன. அதேபோல, கள்ளூர் கிராமத்தில் உள்ள விவசாய நிலங்கள், கால்வாயின் மறுகரையை ஒட்டி அமைந்துள்ளன. மழைக்காலங்களில் விவசாய பணிகளை மேற்கொள்வதிலும் சிரமம் ஏற்படுகிறது.
படகுகள் உதவியுடன் விவசாய இடுபொருட்களை கொண்டு செல்லும் நிலை உள்ளது. எனவே, மீனவர்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி, தரைப்பாலம் அமைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.