/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
நந்தியாறு தரைப்பாலம் சேதம் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
/
நந்தியாறு தரைப்பாலம் சேதம் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
நந்தியாறு தரைப்பாலம் சேதம் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
நந்தியாறு தரைப்பாலம் சேதம் உயர்மட்ட பாலம் அமைக்க கோரிக்கை
ADDED : ஜன 30, 2025 02:10 AM

திருத்தணி:நந்தியாற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தரைப்பாலத்தை உயர்மட்ட பாலமாக அமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் எதிர்பார்கின்றனர்.
திருத்தணி-பொதட்டூர்பேட்டை செல்லும் மாநில முதன்மை நெடுஞ்சாலையில், எம்.ஜி.ஆர்.நகர் அருகே கொசஸ்தலை ஆறு செல்கிறது. இந்த ஆற்றின் குறுக்கே பல ஆண்டுகளுக்கு முன் தரைப்பாலம் அமைக்கப்பட்டது. ஆனால் தரைப்பாலத் திற்கு தடுப்பு சுவர்கள் அமைக்கவில்லை. மேலும், தரைப்பாலத்தில் தார்ச்சாலையும் சேதமடைந்துள்ளன.
இந்த தரைப்பாலம் வழியாக பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு மற்றும் சொராக்காய் பேட்டை உள்பட, 30க்கும் மேற்பட்ட பகுதிகளுக்கு அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன.
இதுதவிர திருத்தணி- பொதட்டூர்பேட்டை நெடுஞ்சாலையில், அதிகாலை, 4:00 மணி முதல் நள்ளிரவு வரை அதிகளவில் வாகனங்கள் சென்றவாறு இருக்கும். இந்நிலையில், பருவ மழையின் போது நந்தியாற்றின் தரைப்பாலத்தின் மீது மூன்றரை அடி உயரத்திற்கு மேல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. அந்த நேரங்களில் திருத்தணி- பொதட்டூர்பேட்டை போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும், பலத்த மழை பெய்யும் போது ஆற்றில் வெள்ளம் ஓடும் போது இதுபோன்று நிலை ஏற்படுகிறது. எனவே தரைப்பாலத்தை, உயர்மட்ட பாலமாக மாற்ற வேண்டும் என, வாகன ஓட்டிகள் மற்றும் மக்கள் எதிர்பார்கின்றனர்.
இது குறித்து திருத்தணி நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,' எம்.ஜி.ஆர்., நகர் நந்தியாற்றில் தரைப்பாலம் இருக்கும் இடத்தில் உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என, எங்கள் துறையின் சார்பிலும் மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசுக்கும் பரிந்துரை கடிதமும் அனுப்பியுள்ளோம். நிர்வாக அனுமதி மற்றும் நிதி ஒதுக்கீடு வந்தால், ஆறு மாதத்திற்குள் உயர்மட்ட பாலம் கட்டப்படும்' என்றார்.
***