/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஓடைக்கால்வாயை துார் வாரி தடுப்பணை அமைக்க கோரிக்கை
/
ஓடைக்கால்வாயை துார் வாரி தடுப்பணை அமைக்க கோரிக்கை
ADDED : ஏப் 05, 2025 02:31 AM

பொன்னேரி:பொன்னேரி அடுத்த குமரஞ்சேரி, பனப்பாக்கம், பெரியகரும்பூர், குடிநெல்வாயல், வெப்பத்துார் ஆகிய கிராமங்கள் வழியாக, பழவேற்காடு ஏரிக்கு மழைநீர் செல்லும் ஓடைக்கால்வாய் அமைந்துள்ளது. இதில் பெரியகரும்பூர், குடிநெல்வாயல் கிராமங்களில் உள்ள கால்வாய் இருபுறமும் கரைகள் இன்றியும், செடிகள் வளர்ந்தும் பராமரிப்பு இன்றி உள்ளது.
இக்கிராமங்களில் நிலத்தடி நீர் உவர்ப்பு தன்மை கொண்டதாக இருப்பதால், மழைநீரை நம்பியே விவசாயம் நடைபெறுகிறது. கால்வாய் பராமரிப்பு இன்றி கிடப்பதாலும், தடுப்பணைகள் இல்லாததாலும் மழைநீரை முழுமையாக சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது.
இதன் காரணமாக விவசாயம் பாதிக்கிறது. மேலும், பழவேற்காடு உவர்ப்பு நீர் ஏரியில், மழைநீர் கலந்து வீணாகிறது. விவசாயத்திற்கும், நிலத்தடி நீர் பாதுகாப்பிற்கும் பயன்தரும் இந்த கால்வாயை முழுமையாக துார்வாரி, இருபுறமும் கரைகள் அமைத்து, தேவையான இடங்களில் தடுப்பணைகள் அமைத்தால், பயனுள்ளதாக இருக்கும் என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து நீர்வளத்துறையினர் ஆய்வு மேற்கொண்டு, நடப்பாண்டு பருவமழைக்கு முன் கால்வாயை சீரமைத்து, மழைநீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

