ADDED : ஏப் 06, 2025 11:36 PM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை பேரூராட்சியில் 15 வார்டுகளில், 20,000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இதைச் சுற்றி, 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இவர்கள், தங்களின் அத்தியாவசிய தேவைக்கு ஊத்துக்கோட்டை சென்று வருகின்றனர்.
சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் ஊத்துக்கோட்டை அமைந்துள்ளதால், போக்குவரத்து மற்றும் மக்கள் நெருக்கடி எப்போதும் இருக்கும். தற்போது, கோடைக்காலம் துவங்கி வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது.
காலை 7:00 மணி முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து, நண்பகல் 11:00 - மாலை 5:00 மணி வரை வெயிலின் தாக்கம் அதிகளவில் இருக்கும். சாலையில் செல்வோர் குடை பிடித்து கொண்டும், பெண்கள் தங்களின் புடவை, துப்பட்டாவால் முகத்தை சுற்றிக் கொண்டும் செல்கின்றனர்.
இவ்வாறு செல்வோர் பணம் கொடுத்து, கடைகளில் இருந்து தண்ணீர் பாட்டில் வாங்கி குடித்து தாகத்தை தீர்த்து கொள்கின்றனர். எனவே, கோடை வெயில் துவங்கிய நிலையில், முக்கிய கட்சியினர் கண்டு கொள்ளாத நிலையில், பேரூராட்சி நிர்வாகம் சார்பில், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தண்ணீர் பந்தல்களை திறக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.