/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குரங்குகள் தொல்லையால் காந்தி நகர் வாசிகள் அவதி
/
குரங்குகள் தொல்லையால் காந்தி நகர் வாசிகள் அவதி
ADDED : பிப் 26, 2024 06:51 AM

ஆவடி: ஆவடி, காந்தி நகரில் குடியிருப்புகளில் உலா வரும் குரங்குகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை வலுத்துள்ளது.
ஆவடி மாநகராட்சி 22வது வார்டு, காந்தி நகரில் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இப்பகுதியில், குரங்குகள் அதிகம் உள்ளன.
இந்த குரங்குகளின் தொல்லையால், நான்கு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
அங்குள்ள மொபைல் போன் டவர் ஒன்றில் தங்கியுள்ள 15க்கும் மேற்பட்ட குரங்குகள், பகல் மற்றும் இரவு வேளைகளில், உணவிற்காக குடியிருப்பு பகுதிகளில் உலா வருகின்றன.
குறிப்பாக, வீடுகளில் புகுந்து குடிநீர் குழாய்களை திறந்து விடுவது, வீடுகளில் புகுந்து கடலை, பருப்பு உள்ளிட்ட உணவு தானியங்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் காயப்போடப்பட்டுள்ள துணிமணிகளை எடுத்துச் செல்வது உள்ளிட்ட சேட்டைகளில் ஈடுபடுகின்றன.
இதனால், ஜன்னல்களை திறந்து வைக்க முடிவதில்லை என, பகுதிவாசிகள் தெரிவித்தனர். மேலும், குழந்தைகள் முதல் பெரியோர் வரை, அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தியும் வருகிறது.
இது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் புகார் அளித்தும் பயனில்லை. குரங்குகளை பிடிக்க அவர்கள் கூண்டுகள் அமைத்தால், கூண்டில் வைக்கும் உணவை தின்றுவிட்டு, தப்பித்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
எனவே, சம்பந்தப்பட்ட வனத்துறை அதிகாரிகள், குரங்குகள் தொல்லையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, குடியிருப்பு வாசிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

