/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி நகராட்சியுடன் இணைய எதிர்ப்பு கொடூர் ஊராட்சி பகுதியினர் மறியல்
/
பொன்னேரி நகராட்சியுடன் இணைய எதிர்ப்பு கொடூர் ஊராட்சி பகுதியினர் மறியல்
பொன்னேரி நகராட்சியுடன் இணைய எதிர்ப்பு கொடூர் ஊராட்சி பகுதியினர் மறியல்
பொன்னேரி நகராட்சியுடன் இணைய எதிர்ப்பு கொடூர் ஊராட்சி பகுதியினர் மறியல்
ADDED : ஜன 18, 2025 02:05 AM

பொன்னேரி:பொன்னேரி நகராட்சி, 8.04 சதுர கி.மீ., பரப்பில், 7,605 குடியிருப்புகளை கொண்டு உள்ளது. கடந்த, 2011ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி, 31,025 மக்கள் வசிக்கின்றனர்.
அதேபோன்று, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தடப்பெரும்பாக்கம் ஊராட்சியில் உள்ள, 22 கிராமங்களில், 8,435 பேரும், கொடூர் ஊராட்சியில் உள்ள, எட்டு கிராமங்களில், 2,106 பேர் வசிக்கின்றனர்.
கடந்த ஆண்டு, டிசம்பர் மாதம், 31ம் தேதி, பொன்னேரி நகராட்சியுடன், தடப்பெரும்பாக்கம் மற்றும் கொடூர் ஊராட்சிகளை இணைத்து தமிழக அரசு, அரசாணை வெளியிட்டது. இதனால் நகராட்சியின் எல்லை, 8.04 ல் இருந்து, 15.31 சதுர கி.மீ., ஆக விரிவாக்கம் செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டது
இந்நிலையில், கொடூர் ஊராட்சியை பொன்னேரி நகராட்சியுடன் இணைப்பதற்கு, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக நேற்று, கொடூர் ஊராட்சி மக்கள், பொன்னேரி - தச்சூர் நெடுஞ்சாலையில் நேற்று திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:
கொடூர் ஊராட்சியில், ஏராளமானோர் 100 நாள் பணியை நம்பி இருக்கிறோம். நகராட்சியுடன் இணைப்பதால், 100 நாள் வேலை பறிபோகும். ஏழ்மை நிலையில் இருப்பவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். வரி வருவாய் அதிகரிக்கும்.
இதனால் அன்றாட கூலித்தொழிலாளர்கள் பாதிப்பிற்கு உள்ளாவர்கள். கிராமப்புறங்களுக்கு கிடைக்கும் அரசின் பல்வேறு திட்டங்கள் கிடைக்காமல் போகும். இது ஏழை, நடுத்த மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கும். நகராட்சியுடன் இணைக்கும் முடிவை அரசு கைவிடவேண்டும். அதுவரை தொடர் போராட்டங்களில் ஈடுபடுவோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பொன்னேரி போலீசார் பேச்சு நடத்தினர். அதிகாரிகளிடம் நேரில் முறையிட்டு தீர்வு பெறும்படி அறிவுறுத்தினர். அதை தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.