திருத்தணியை மீட்ட ம.பொ.சி., சிலைக்கு மாலை அணிவிப்பு
திருத்தணியை மீட்ட ம.பொ.சி., சிலைக்கு மாலை அணிவிப்பு
UPDATED : அக் 04, 2026 12:00 AM
ADDED : அக் 03, 2026 08:56 PM
திருத்தணி: ஆந்திர மாநிலத்தில் இருந்து திருத்தணியை மீட்ட, ம.பொ.சி.,யின் நினைவு நாளான நேற்று, அவரது சிலைக்கு பல்வேறு சங்கத்தினர் மலர் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
கடந்த 1953ம் ஆண்டு அக்டோபர் மாதம் மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட போது, தமிழர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வந்த திருத்தணி பகுதி, ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.
இதையடுத்து, ம.பொ.சிவஞானம், மல்லங்கிழார், தளபதி விநாயகம் போன்ற தலைவர்கள் இணைந்து, ‘மதராஸ் மனதே, திருத்தணியும் நமதே’ என, எல்லை போராட்டம் நடத்தி வந்தனர்.
இதன் பயனாக, 1960 ஏப்., 1ம் தேதி முதல் திருத்தணி பகுதி, தமிழகத்தில் உள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் இணைக்கப்பட்டது. இதனால், ம.பொ.சிவஞானத்திற்கு திருத்தணி நகராட்சி அலுவலகம் அருகே சிலை அமைக்கப்பட்டது.
இந்நிலையில் நேற்று, தணிகை மீட்ட ம.பொ.சி.,யின் 31வது நினைவு நாளையொட்டி, திருத்தணி மங்கலங்கிழார் கல்வி அறக்கட்டளை மற்றும் காஞ்சிபுரம் சாம்பசிவனார் -ராதாபாய் அறக்கட்டளை சார்பில், ம.பொ.சி., சிலை மற்றும் மங்கலங்கிழார் சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்தப்பட்டது.
