/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
/
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
புறநகர் மின்சார ரயில்களில் அரிசி கடத்தல் அதிகரிப்பு
ADDED : டிச 27, 2025 06:11 AM

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி மார்க்கமாக ஆந்திர மாநிலம் செல்லும் புறநகர் மின்சார ரயில்களில், அதிகளவில் தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது.
சென்னை சென்ட்ரல் மற்றும் கடற்கரை ரயில் நிலையங்களில் இருந்து கும்மிடிப்பூண்டி மார்க்கமாக, ஆந்திர மாநிலம் சூளூர்பேட்டை வரை, தினசரி 20க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.
இந்த ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. குறிப்பாக, ஆந்திராவைச் சேர்ந்த பெண்கள், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களிடம் குறைந்த விலையில், தமிழக ரேஷன் அரிசியை வாங்குகின்றனர்.
இந்த ரேஷன் அரிசிகளை, 20 கிலோ மற்றும் 10 கிலோ மூட்டைகளாக கட்டிக் கொள்கின்றனர். அந்த மூட்டைகளை, மேற்கண்ட புறநகர் மின்சார ரயில்களில், பயணியரின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கின்றனர்.
மூட்டைகளுக்கும், அவர்களுக்கும் சம்பந்தம் இல்லாதபடி, அதே பெட்டியில் சற்று தள்ளி அமர்ந்துக் கொள்கின்றனர். தடா, சூளூர்பேட்டை ரயில் நிலையங்கள் வந்ததும், மூட்டைகளை இறக்கி கடத்தி செல்கின்றனர்.
இந்த முறையில், தினமும் டன் கணக்கான தமிழக ரேஷன் அரிசி கடத்தப்பட்டு வருகிறது. பெரும்பாலும், ரயில்வே போலீசார் கடத்தல் சம்பவங்களை கண்டுகொள்வதில்லை என, கூறப்படுகிறது.
திருவள்ளூர் மாவட்ட குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரும், வட்ட வழங்கல் துறையினரும், அடிக்கடி புறநகர் மின்சார ரயில்களில் சோதனை நடத்தி, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்து, அதை கடத்துவோரை கைது செய்வதை வழக்கமாக கொண்டிருந்தனர்.
பல மாதங்களாக இரு துறையினரும் கண்டுகொள்ளாததால், புறநகர் மின்சார ரயில்களில் ரேஷன் அரிசி கடத்தல் தாராளமாக நடந்து வருகிறது. உடனே, கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த இரு துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

