/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்
/
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்
ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க கோரி நரிக்குறவர்கள் சாலை மறியல்
ADDED : நவ 19, 2024 06:51 AM

திருவள்ளூர் ; சோழவரம் அருகே நரிக்குறவர் இன மக்களுக்கு வழங்கப்பட்ட 45 ஏக்கர் நிலத்தை மீட்டு தரக்கோரி, கலெக்டர் அலுவலகம் முன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த ஒரக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட அல்லிமேடு பகுதியில், நரிக்குறவர் இன மக்களுக்கு, 1971ல் 45 ஏக்கர் நிலம் தானமாக வழங்கப்பட்டது.
இந்நிலையில், நரிக்குறவர்கள் பிழைப்பு தேடி வெளியூர் சென்றுவிட்டு, சில ஆண்டுகளுக்கு முன் ஊர் திரும்பினர். அப்போது, தனிநபர் ஒருவர் தனக்கு சொந்தமான பட்டா இடம் எனக் கூறி, சுற்றுச்சுவர் அமைக்க முயன்றார்.
அப்பகுதியில் திரண்ட நரிக்குறவர்கள் பணியை தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில், மீண்டும் அந்த இடத்தில் சுற்றுச்சுவர் அமைக்க முயற்சி செய்வதாக கூறி, 100க்கும் மேற்பட்ட நரிக்குறவர்கள் குடும்பத்துடன், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை நேற்று முற்றுகையிட்டனர்; போலீசார் அவர்களை தடுத்தனர்.
திடீரென, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து, கூடுதல் போலீசார் வரவழைக்கப்பட்டு, அவர்களை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர்.
பின், 'ஆக்கிரமிக்கப்பட்ட தங்கள் நிலத்தை மீட்டுத் தரும் வரை செல்ல மாட்டோம்' எனக் கூறி, தர்ணாவில் ஈடுபட்டனர்.
போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி, அவர்களில் சிலரை மட்டும் கலெக்டரிடம் மனு அளிக்க அழைத்துச் சென்றனர். அதன்பின், நரிக்குறவர்கள் போராட்டத்தை கைவிட்டனர். இதனால், கலெக்டர் அலுவலகத்தில் இரண்டு மணி நேரத்திற்கும் மேல் பரபரப்பு நிலவியது.

