/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அதிகாரிகளின் அலட்சியத்தால் வகுப்பறையாக மாறிய மரத்தடி மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி

ADDED : அக் 08, 2025 12:27 AM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டி அருகே அரசு பள்ளி கூரை பெயர்ந்து வகுப்பறைக்குள் விழுந்த நிலையில், தற்போது பள்ளி விடுமுறையில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளாததால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி அருகே சுண்ணாம்புகுளம் கிராமத்தில் இயங்கி வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், 130 மாணவ - மாணவியர் பயின்று வருகின்றனர். பள்ளி வளாகத்தில், மூன்று வகுப்பறை கட்டடங்கள் உள்ளன. அதில் ஒன்று, 20 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது.
கடந்த ஆகஸ்ட் மாதம், இக்கட்டடத்தின் கூரை பெயர்ந்து வகுப்பறைக்குள் விழுந்தது. அங்கிருந்த மாணவர்கள் விளையாட சென்றதால், அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
ஆய்வு மேற்கொண்ட கல்வி அலுவலர்கள், காலாண்டு தேர்வு விடுமுறை நாட்களில் சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்ததால், அந்த வகுப்பறை கட்டடம் பூட்டப்பட்டது. அன்று முதல், மரத்தடி நிழலில் மாணவர்களுக்கு பாடம் எடுக்கப்பட்டு வருவதாக, பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
தற்போது, காலாண்டு தேர்வு முடிந்து பள்ளி திறக்கப்பட்ட நிலையில், எந்த ஒரு சீரமைப்பு பணியும் மேற்கொள்ளப்படாததால், பெற்றோர் அதிருப்தியில் உள்ளனர்.
எனவே, வகுப்பறை கட்டடத்தில் உடனே சீரமைப்பு பணிகள் மேற்கொள்ள, மாவட்ட நிர்வாகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.