/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
முகத்துவாரத்தில் டிரெஜ்ஜர் உதவியுடன் அகற்றப்படும்...மணல் திட்டுக்கள்!: பழவேற்காடில் நீண்டகால பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
/
முகத்துவாரத்தில் டிரெஜ்ஜர் உதவியுடன் அகற்றப்படும்...மணல் திட்டுக்கள்!: பழவேற்காடில் நீண்டகால பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
முகத்துவாரத்தில் டிரெஜ்ஜர் உதவியுடன் அகற்றப்படும்...மணல் திட்டுக்கள்!: பழவேற்காடில் நீண்டகால பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
முகத்துவாரத்தில் டிரெஜ்ஜர் உதவியுடன் அகற்றப்படும்...மணல் திட்டுக்கள்!: பழவேற்காடில் நீண்டகால பிரச்சனைக்கு விரைவில் தீர்வு
ADDED : ஏப் 23, 2025 09:38 PM

பழவேற்காடு:பழவேற்காடு ஏரியும், கடலும் சந்திக்கும் பகுதியான முகத்துவாரத்தில், 26.85 கோடி ரூபாயில் இருபுறமும் கற்கள் பதித்து, மணல் குவிவதை தடுக்க தடுப்புச்சுவர் அமைக்கப்பட்ட நிலையில், தற்போது, 'டிரஜ்ஜர்' உதவியுடன் மணல் திட்டுக்களை அகற்றும் பணிகள் மும்முரமாக நடைபெறுகிறது. இதனால், நீண்டகால பிரச்னைக்கு விரைவில் தீர்வு கிடைக்கும் என, மீனவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு கடலும், ஏரியும் சந்திக்கும் முகத்துவாரம் பகுதி வழியாக, 30க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலுக்குள் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.
முகத்துவாரமானது மீன்பிடி படகுகள் கடலுக்குள் செல்வதற்கான நுழைவுவாயிலாக இருக்கிறது. மேலும், மாவட்டத்தின் பல்வேறு நீர்நிலைகளின் இருந்து கடைசியாக வந்தடையும் மழைநீரை கடலுக்குள் கொண்டு சென்று, பாதிப்புகளை தடுப்பதிலும் முகத்துவாரம் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த முகத்துவாரம் அடிக்கடி மணல் திட்டுக்களால் துார்ந்து போனது. மீனவர்கள் கடலுக்கு சென்று வரும்போது, மணல் திட்டுக்களில் படகுகள் சிக்கி கவிழும் நிலை ஏற்பட்டது. அதிகப்படியான மணல் குவியும் நேரங்களில், மீனவர்கள் தொழிலுக்கு செல்ல முடியாத சூழலும் இருந்தது.
மேலும், மழைக்காலங்களில் பல்வேறு பகுதிகளில் இருந்து பழவேற்காடு ஏரிக்கு வரும் மழைநீர், கடலுக்குள் செல்ல முடியாமல், மீனவ கிராமங்களை சூழ்ந்து பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்கிறது. மீனவர்களின் நீண்டகால கோரிக்கை மற்றும் பல்வேறு போராட்டங்களின் பயனாக, நபார்டு வங்கி நிதியுதவியின் கீழ், 26.85 கோடி ரூபாயில் நிரந்தர முகத்துவாரம் அமைக்க, கடந்த அ.தி.மு.க., ஆட்சியின்போது நிதி ஒதுக்கப்பட்டது.
பறவைகள் சரணாலயம், வனத்துறை, மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் என, பல்வேறு துறைகளின் அனுமதி பெற்ற பின், கடந்தாண்டு ஜனவரி மாதம், திட்டத்திற்கான பணிகள் துவங்கப்பட்டன.
பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன், ராட்சத பாறைகள் கொண்டு வரப்பட்டு, கடலும், ஏரியும் இணையும் பகுதியில் அலைதடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த அலை தடுப்பு சுவரானது, கடல் மற்றும் ஏரியின் வடக்கு பகுதியில், 160 மீ., நீளம், தெற்கு பகுதியில் 150 மீ., நீளம் மற்றும் 4.5 மீ., உயரத்தில் அமைக்கப்பட்டன.
இப்பணிகள் முடிவுற்ற நிலையில், அலை தடுப்பு சுவர்களுக்கு இடையே உள்ள பகுதியில் குவிந்திருக்கும் மணல் திட்டுக்களை அகற்றும் பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது. அலை தடுப்புச்சுவர்களின் நீளத்திற்கு, 200 -- 280 மீ., அகலம், 3 மீ., ஆழத்தில் மணல் திட்டுக்கள் வெளியேற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
இதற்கென உள்ள 'டிரெஜ்ஜர்' இயந்திரத்தை கொண்டு அலை தடுப்பு சுவர்களுக்கு மத்தியில் உள்ள மணல் திட்டுக்கள் வெளியேற்றப்படுகிறது. அடுத்த இரு மாதங்களுக்குள் இப்பணிகளை முடித்து, மீனவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மீன்வளத்துறை அதிகாரி கூறியதாவது:
தற்போது ஒரு டிரெஜ்ஜர் பயன்படுத்தி, மணல் திட்டுக்கள் அகற்றப்படுகிறது. பணிகளை துரிதமாக மேற்கொள்வதற்கு ஏதுவாக, மற்றொரு டிரெஜ்ஜரை பொருத்துவதற்கான பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இரண்டு டிரெஜ்ஜர்கள் உதவியுடன் முகத்துவாரம் பகுதியில் உள்ள ஏரி மற்றும் கடல் பகுதியில் குறிப்பிட்ட துாரத்திற்கு மணல் திட்டுக்கள் அகற்றப்படும்.
ஆரணி ஆறு, பகிம்ஹாம் கால்வாய் உள்ளிட்ட பல்வேறு நீர்நிலைகளின் உபரிநீர் பழவேற்காடு ஏரியில் கலந்து, பின் முகத்துவாரம் வழியாக கடலுக்குள் செல்கிறது.
இது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஏற்படும் வெள்ளத்தை உள்வாங்கி கடலுக்கு அனுப்புவதால், பாதிப்புகளை குறைக்க உதவுகிறது. நிரந்தர முகத்துவாரம் அமைவதால், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுவதுடன், மழைக்காலங்களில் ஆற்றுநீர் எளிதாக கடலுக்கு செல்லும். இரண்டு மாதங்களில் பணிகளை முடிக்க திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆண்டுக்கு ஒருமுறை மணல் திட்டுக்களை அகற்ற வேண்டும்
முகத்துவாரத்தில் மணல் திட்டுக்கள் குவிந்து விடுவதால், தொழில் பாதிப்பும் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாக இருக்கிறது. தற்போது அலைதடுப்பு சுவர் அமைத்து, அதன் இடையில் உள்ள மணல் திட்டுக்கள் அகற்றப்படுகிறது. இதனால் முகத்துவாரத்தில் மணல் திட்டுக்கள் குவிவது குறையும். அதேசமயம், ஆண்டுக்கு ஒருமுறை குவியும் மணல் திட்டுக்களை அகற்றினால், மீனவர்கள் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும்.
- எஸ்.புண்ணியக்கோட்டி,
மீனவர், பழவேற்காடு.