/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு...5,000 பேர்!:பணி துவங்காமல் இருந்தால் அனுமதி ரத்து
/
வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு...5,000 பேர்!:பணி துவங்காமல் இருந்தால் அனுமதி ரத்து
வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு...5,000 பேர்!:பணி துவங்காமல் இருந்தால் அனுமதி ரத்து
வீடு கட்டும் திட்டத்தில் பயனாளிகள் தேர்வு...5,000 பேர்!:பணி துவங்காமல் இருந்தால் அனுமதி ரத்து
ADDED : ஆக 09, 2024 11:48 PM
திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில், வீடு கட்டும் திட்டத்தில், நடப்பு ஆண்டிற்கு, 4,954 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் உடனடியாக வீடு கட்ட, நிர்வாக பணி ஆணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. உடனே 100 பயனாளிகள் வீடு கட்டுமான பணியை துவக்கி உள்ளனர்.
தமிழகத்தில், வரும், 2030க்குள் குடிசை வீடு இல்லாத மாநிலமாக மாற்ற, கலைஞர் கனவு இல்லம் திட்டத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதன்படி, மாநிலம் முழுதும், 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் தமிழக அரசு கட்டித் தரப்படும் என, நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இதன்படி, குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற தலா ஒரு வீட்டிற்கு தமிழக அரசு 3.50 லட்சம் ரூபாய் வழங்க உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 14 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட, 526 ஊராட்சிகளில், 1,780க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.
இலக்கு நிர்ணயம்
இந்த கிராமங்களில் குடிசை வீடுகள் குறித்து, வருவாய், ஊரக வளர்ச்சி துறையினர் கணக்கெடுத்து வருகின்றனர்.
நடப்பு, 2024ம் ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்தில் 4,000 கான்கிரீட் வீடுகள் கட்டித் தர இலக்கு நிர்ணயிக்கப்பட்டன. பயனாளிகள் ஊராட்சி அலுவலகம் வாயிலாக விண்ணப்பித்துள்ளனர்.
இதில், உரிய ஆவணங்களுடன் வரப்பெற்ற விண்ணப்பங்களை, கலெக்டர் பிரபுசங்கர் தலைமையிலான, வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சி துறையினர் கவனமாக பரிசீலனை செய்தும், சம்பந்தப்பட்ட குடிசை வீடுகளுக்கு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட வருவாய் மற்றும் ஊரக வளர்ச்சித் துறையினர் கள ஆய்வு மேற்கொண்டனர்.
இதில், தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். முதற்கட்டமாக நடப்பு ஆண்டில், தமிழக அரசு நிர்ணயித்த இலக்கான, 4,000 வீடுகளுக்கு அதிகமாக,4,954 கான்கிரீட் வீடுகள் கட்ட பணி ஆணை ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு தொடரும்
திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயக்குமார் கூறியதாவது:
நடப்பு ஆண்டில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட இலக்கை விட, கூடுதலாக, 954 குடிசை வீடுகளை கான்கிரீட் வீடுகளாக மாற்ற நிர்வாக அனுமதி மற்றும் பணி ஆணை வழங்கப்பட்டு உள்ளது.
தற்போது, கான்கிரீட் வீடு கட்டுவதற்கான, அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது. பணி ஆணை பெற்றவர்களில் 100 பேர் தற்போது, வீடு கட்டும் பணியை துவக்கி உள்ளனர்.
இத்திட்டத்தில் நிர்வாகப் பணி ஆணை பெற்ற பயனாளிகள், வீடு கட்டும் வரை, ஊரக வளர்ச்சித் துறையினர் நேரடியாக கண்காணித்து வருவர்.
தமிழக அரசின் நோக்கமான, கான்கிரீட் வீடுகள் முழுமை பெறும் வரை, இந்த கண்காணிப்பு தொடரும்.
வீடு கட்டும் பணி ஆணை பெற்றவர்கள், நிர்ணயிக்கப்பட்ட கால கெடுவிற்குள் பணியை துவக்காமல் இருந்தாலோ அல்லது விருப்பம் இல்லாவிட்டால், அவர்களின் பணி அனுமதி உத்தரவு உடனடியாக ரத்து செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.