/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருமழிசை ரத வீதிகளில் தேங்கியுள்ள கழிவுநீர்
/
திருமழிசை ரத வீதிகளில் தேங்கியுள்ள கழிவுநீர்
ADDED : ஜன 11, 2025 02:11 AM

திருமழிசை:திருவள்ளூர் - பூந்தமல்லி நெடுஞ்சாலையில், வெள்ளவேடு அடுத்துள்ளது திருமழிசை. இங்குள்ள ஜெகந்நாத பெருமாள் கோவிலில், எழுந்தருளியுள்ள 'பக்திஸாரர்' எனும் திருமழிசை ஆழ்வாருக்கு, 'தையில் மகம்' திருஅவதார மகோற்சவம் கடந்த டிச. 25ம் தேதி, காலை 9:00 மணி முதல் 10:00 மணிக்குள் மகர லக்கனத்தில் பந்தக்கால் நிகழ்ச்சி துவங்கியது.
பின், கடந்த 6ம் தேதி, ஆழ்வார் ஆஸ்தானம் விட்டு எழுந்தருளல் நிகழ்ச்சியுடன் திருவிழா நடந்து வருகிறது. இதையடுத்து, சுவாமி காலை, மாலை சுவாமி பல்வேறு பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
நேற்று, மூன்றாம் நாள் திருவிழாவை முன்னிட்டு, சூரிய சபையில் திருமழிசை ஆழ்வார் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் குடியிருப்பு பகுதிகள் உள்ள ரதவீதிகளில் வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் குளம்போல் தேங்கி நின்றது.
இதனால் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுவாமியை பல்லக்கில் துாக்கி வரும் சீர்பாதகர்கள் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, பேரூராட்சி நிர்வாகம் சுவாமி வீதியுலா வரும் ரதவீதிகளில் கழிவுநீர் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

