/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பாதாள சாக்கடை விரிவாக்கத்தில் இழுபறி சாலைகளில் மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்
/
பாதாள சாக்கடை விரிவாக்கத்தில் இழுபறி சாலைகளில் மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்
பாதாள சாக்கடை விரிவாக்கத்தில் இழுபறி சாலைகளில் மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்
பாதாள சாக்கடை விரிவாக்கத்தில் இழுபறி சாலைகளில் மழைநீருடன் தேங்கும் கழிவுநீர்
ADDED : டிச 24, 2024 12:17 AM

கருத்துரு சமர்ப்பிப்பு
திருவள்ளூர் நகராட்சியில், பாதாள சாக்கடைத் திட்டம் வாயிலாக, வீடுகளுக்கு தொடர்ந்து இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது உள்ள சூழ்நிலையில், 8,000 வீடுகளுக்கு இணைப்பு வழங்க இயலும். விரிவாக்கப் பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த வேண்டும் என்ற, கவுன்சிலர்களின் கோரிக்கை மற்றும் நகராட்சியில் தீர்மானம் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தற்போது, தமிழக அரசின் நிதி மேலாண்மை பிரிவு அலுவலர்களிடம், கோப்பு உள்ளது. அவர்கள், 2050ல் மக்கள் தொகை விரிவாக்கத்திற்கு ஏற்ப, பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்த ஆலோசனை செய்து வருகின்றனர். ஆய்வு முடிந்ததும், திட்ட ஆய்வறிக்கை மற்றும் தேவையான நிதி குறித்து அரசிடம் சமர்ப்பிக்கப்படும். அரசு நிதி ஒதுக்கீடு செய்த பின், நகர் முழுதும் பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்யப்படும்.
உதயமலர்,
நகராட்சி தலைவர், திருவள்ளூர்.
திருவள்ளூர், டிச. 24-
திருவள்ளூர் நகராட்சியில், விரிவாக்கம் அடைந்த பகுதிகளில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு அரசு அனுமதி பெறுவதில் இழுபறி நீடிக்கிறது. இதனால், பாதாள சாக்கடை குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு, மழைநீருடன் கழிவுநீர் கலந்து, சாலைகளில் தேங்கி, சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
திருவள்ளூர் நகராட்சியில், 2008ல், பாதாள சாக்கடைத் திட்டப்பணி, 55 கோடி ரூபாய் மதிப்பில் துவங்கப்பட்டது. அப்போது, நகரில், 11,900 கட்டடங்கள் இருந்தன.
அதற்கேற்ற வகையில், நகரில், 86.97 கி.மீட்டருக்கு குழாய் பதிக்கும் பணி துவங்கி நிறைவு பெற்றது. 10 ஆண்டுகளாக பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
தற்போது, 7,000 வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீர், நகரின் மூன்று இடங்களில், சேகரிக்கப்பட்டு, பின், புட்லுார் ஏரி அருகில், உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது.
அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட கழிவுநீர், புட்லுார் ஏரி வழியாக, கூவம் ஆற்றில் வெளியேற்றப்படுகிறது.
விரிவாக்கம்
கடந்த, 14 ஆண்டுகளில் ஜெயா நகர், வி.எம்., நகர், ஜவஹர் நகர், ஜெ.ஜெ.நகர், டோல்கேட் என, பல்வேறு பகுதிகளில், புதிது, புதிதாக குடியிருப்புகள் உருவாகி வீடுகள் கட்டப்பட்டு வருகின்றன.
அதிகரித்து வரும் வீடுகளுக்கு ஏற்ப, பாதாள சாக்கடை திட்டம் விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய அவசியம் ஏற்பட்டு உள்ளது.
தற்போதைய நிலவரப்படி, நகராட்சியில், வீடு, கடைகள், வணிக வளாகம், ஹோட்டல் என, 15,000க்கும் மேற்பட்ட கட்டடங்கள் உள்ளன.
இந்த நிலையில், ஏற்கனவே உள்ள வீடுகளுக்கு பாதாள சாக்கடை இணைப்பு வழங்கவில்லை. அவர்கள், தங்களது வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரினை, நகராட்சி மழைநீர் கால்வாய் மற்றும் பொதுப்பணி துறை கால்வாயில் வெளியேற்றுகின்றனர்.
சுகாதார சீர்கேடு
இதனால், சாலைகளில் கழிவுநீர் தேங்கி, துர்நாற்றம் வீசுகிறது. தற்போது பெய்து வரும் கனமழையால், ஏற்கனவே பாதாள சாக்கடை இணைப்பு பெற்ற பகுதி மற்றும் விரிவாக்க பகுதிகளில், மழைநீர், கழிவுநீருடன் கலந்து காணப்படுகிறது.
புட்லுார் ஏரி நிரம்பியதால், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தைச் சுற்றிலும் மழைநீரும், கழிவுநீரும் கலந்து துர்நாற்றம் வீசுகிறது. சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற வழியில்லாமல், பாதாள சாக்கடை 'மேன்ஹோல்' வழியாக, கழிவுநீர் சாலைகளில் பரவி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.
எனவே, திருவள்ளூர் நகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பினை விரிவுபடுத்த வேண்டும் என, நகரவாசிகள் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.
துர்நாற்றம்
திருவள்ளூர் தேவி மீனாட்சி நகர், சிவம் நகர் அருகில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.
ஆரம்பத்தில், புட்லுார் ஏரியில் தண்ணீர் நிரம்பாததால், சுத்திகரிப்பு செய்யப்படும் கழிவுநீர் ஏரி வழியாக, கூவம் ஆற்றுக்கு சென்றது.
தற்போது, புட்லுார் ஏரி மழையால் நிரம்பியுள்ளது. இதனால், சுத்திகரிப்பு மையத்தில் இருந்து கழிவுநீர் வெளியேற வழியில்லாமல் ஏரியில் கலந்துள்ளது.
சில ஆண்டுக்கு முன், நகராட்சி நிர்வாகம் குழாய் வழியாக, ரயில்வே தண்டவாளத்தை கடந்து, கழிவுநீரை வெளியேற்றியது.
தற்போது, சுத்திகரிப்பு மையத்தைச் சுற்றிலும், மழைநீருடன், கழிவுநீரும் கலந்து விட்டதால், அப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன், சுற்றிலும் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு நோய் பரப்பும் மையமாக மாறிவிட்டது.