ADDED : ஜூன் 23, 2025 11:06 PM

திருத்தணி, திருத்தணி நகராட்சி கமலா தியேட்டர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து சென்னை, சித்துார், வேலுார், திருவள்ளூர், திருப்பதி உட்பட பல்வேறு ஊர்களுக்கு, அதிகாலை 5:00 - நள்ளிரவு 11:00 மணி வரை, நுாற்றுக்கணக்கான பயணியர் பேருந்தில் பயணம் செய்கின்றனர்.
இங்கு, நிழற்குடை அமைக்கப்படாததால், வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பயணியர் கடும் சிரமப்பட்டு வந்தனர். திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 23.50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தார்.
இதை தொடர்ந்து, குளிர்சாதன நிழற்குடை அமைக்க, கடந்த மாதம் 29ம் தேதி பணிகளை துவக்கி வைத்தார். தற்போது, நிழற்குடை கட்டும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது. அடுத்த மாதம் கடைசி வாரத்தில் பணிகள் முடிந்து பயன்பாட்டிற்கு வரும் என, நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.