/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
மந்தகதியில் கால்வாய் பணி ஜெயின் நகர் மக்கள் அவதி
/
மந்தகதியில் கால்வாய் பணி ஜெயின் நகர் மக்கள் அவதி
ADDED : செப் 03, 2025 01:48 AM

திருவள்ளூர்:திருவள்ளூர் ஜெயின் நகரில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி, மந்தகதியில் நடைபெறுவதால், பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
திருவள்ளூர் நகராட்சி, 14வது வார்டுக்கு உட்பட்ட ஜெயின் நகரில், 1,000க்கும் மேற்பட்ட வீடுகளில், 3,500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இந்த நகரில், மழை காலத்தில் தண்ணீர் வெளியேற வழியில்லாமல், சாலையில் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால், பகுதி மக்களும், மாணவ- - மாணவியரும் சிரமப்பட்டு வருகின்றனர்.
இதையடுத்து, ஜெயின் நகர் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணியை, ஒரு மாதத்திற்கு முன் திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் துவக்கியது. இப்பணி மந்தகதியில் நடைபெறுவதால், பகுதி மக்கள் சாலையில் நடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.
தற்போது, திருவள்ளூர் நகரில், அவ்வப்போது மழை பெய்து வருவதால், ஜெயின் நகரில் கால்வாய் பணி நடக்கும் பகுதியில் மழைநீர் தேங்கி விடுகிறது. வடகிழக்கு பருவமழை துவங்குவதற்கு முன்பாக, கால்வாய் அமைக்கும் பணியை விரைவு படுத்த வேண்டும் என, பகுதி மக்கள், நகராட்சி நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.