/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பொன்னேரி நகராட்சியில் சிறு வியாபாரிகளுக்கு... கிடுக்கிப்பிடி:சாலையோர கடைகளுக்கு நவ., 1 முதல் கட்டணம்
/
பொன்னேரி நகராட்சியில் சிறு வியாபாரிகளுக்கு... கிடுக்கிப்பிடி:சாலையோர கடைகளுக்கு நவ., 1 முதல் கட்டணம்
பொன்னேரி நகராட்சியில் சிறு வியாபாரிகளுக்கு... கிடுக்கிப்பிடி:சாலையோர கடைகளுக்கு நவ., 1 முதல் கட்டணம்
பொன்னேரி நகராட்சியில் சிறு வியாபாரிகளுக்கு... கிடுக்கிப்பிடி:சாலையோர கடைகளுக்கு நவ., 1 முதல் கட்டணம்
UPDATED : அக் 16, 2025 11:01 PM
ADDED : அக் 16, 2025 09:48 PM

பொன்னேரி: பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சாலையோர வியாபாரிகளை வரைமுறைப்படுத்தும் வகையில், நவ., 1ம் தேதி முதல், கடைகளின் வகைப்பாடு, பயன்படுத்தும் இடத்தின் அளவிற்கு ஏற்ப ஆண்டிற்கு, 375 முதல், 3,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட உள்ளதால், புற்றீசல் போல் அதிகரிக்கும் சாலையோர கடைகளுக்கு கிடுக்கிப்பிடி போடப்பட்டு உள்ளது. பொன்னேரி நகராட்சியில், 27 வார்டுகள் உள்ளன. இதில், அரிஅரன் பஜார், புதிய தேரடி தெரு, திருவொற்றியூர் சாலை ஆகிய பகுதிகளில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன.
![]() |
மேற்கண்ட சாலைகளில் காய்கறி, பூ, பழம் என, சாலையோர கடைகளும் ஏராளமாக உள்ளன. இவை சரியான வரைமுறை இன்றி, சாலைகளை ஆக்கிரமித்தும், போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தும் வகையிலும் உள்ளன.
இவற்றை வரைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. அதன்படி, சாலையோர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதுகாத்தல் மற்றும் வியாபார ஒழுங்குமுறை படுத்துதல் சட்டத்தின் கீழ், கடந்த, 2022ல், பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலையோர கடைகள் குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
அதில், பல்வேறு வகை விற்பனையில், 242, சாலையோர கடைகள் இருப்பது தெரியவந்தது. அதையடுத்து இவற்றை ஒழுங்குபடுத்தும் வகையில், பொன்னேரி நகராட்சி கமிஷனர் தலைமையில், அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலர், போக்குவரத்து மற்றும் சட்டம் - ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர்கள், வணிகர் சங்க பிரதிநிதிகள், மக்கள் பிரதிநிதிகள் என, 15பேர் கொண்ட பொன்னேரி நகர விற்பனைக்குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுதும் உள்ள சாலையோர கடைகளை ஒழுங்குப்படுத்தி, விற்பனை கட்டணம் நிர்ணயம் செய்வது தொடர்பாக, கடந்த, ஜூலை மாதம், சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டிருந்தது.
அந்த உத்தரவின் அடிப்படையில், நகராட்சி நிர்வாக ஆணையரின் அறிவுறுத்தல்படி தற்போது பொன்னேரி நகராட்சியில் உள்ள சாலையோர கடைகளுக்கும் விற்பனை கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.
![]() |
இது தொடர்பாக கடந்த மாதம், பொன்னேரி நகர விற்பனை குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில், சாலையோர வியாபாரிகள் பயன்படுத்தும் இடத்தின் அளவு மற்றும் வகைப்பாடு ஆகியவற்றிற்கு ஏற்ப, கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஆண்டிற்கு, குறைந்தபட்சம், 375 முதல், அதிகபட்சம், 3,000 ரூபாய் வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
இந்த கட்டணம், நவ., 1 முதல், சாலையோர கடை வியாபாரிகளிடம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக நகராட்சி கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதன் வாயிலாக, சாலையோர கடைகளை வரைமுறைப்படுத்த முடியும் என நகராட்சி நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து நகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பொன்னேரி நகரத்தில், விற்பனை பகுதிகளாக கண்டயறிப்பட்டு உள்ள சாலையோர வியாபாரிகளின் பயன்பாட்டில் இருக்கும் இடத்தின் பரப்பிற்கு ஏற்பவும், எந்த மாதிரியான வியாபாரம் செய்கின்றனர் என்பதை பொருத்தும் கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.
இதன் மூலம், சாலையோர வியாபாரிகளுக்கு உரிய அடையாள அட்டை வழங்கப்படுவதால், அவர்கள் தொழில் பாதுகாக்கப்படும். புற்றீசல்போல் சாலையோர கடைகள் வருவதையும் கட்டுப்படுத்த முடியும். இது குறித்து சாலையோர வியாபாரிகளிடம் முறையாக தெரிவித்து, செயல்படுத்த திட்டமிட்டு உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.