/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளவி கொட்டி 6 மாதத்தில் 30 பேர் பாதிப்பு: ஒருவர் பலி அதிகாரிகளின் அலட்சியம் காரணமா?
/
குளவி கொட்டி 6 மாதத்தில் 30 பேர் பாதிப்பு: ஒருவர் பலி அதிகாரிகளின் அலட்சியம் காரணமா?
குளவி கொட்டி 6 மாதத்தில் 30 பேர் பாதிப்பு: ஒருவர் பலி அதிகாரிகளின் அலட்சியம் காரணமா?
குளவி கொட்டி 6 மாதத்தில் 30 பேர் பாதிப்பு: ஒருவர் பலி அதிகாரிகளின் அலட்சியம் காரணமா?
ADDED : அக் 16, 2025 09:46 PM
திருவாலங்காடு:திருவாலங்காடு ஒன்றியத்தில், கடந்த ஆறு மாதங்களில் குளவி கொட்டி 30 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மூதாட்டி ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிகாரிகளின் அலட்சியமே இதற்கு காரணம் என, சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு 42 ஊராட்சிகள் உள்ளன. இங்கு பெரும்பாலானோர் விறகு வெட்டுதல், பூ பறிப்பது, நெல் களையெடுப்பு உள்ளிட்ட விவசாய கூலி வேலையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேற்கண்ட ஊராட்சிகளில் இருந்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் பணி செய்கின்றனர்.
இந்நிலையில் கடந்த ஆறு மாதத்தில் ஒன்றியத்திற்கு உட்பட்ட தாழவேடு, சந்தனவேணுகோபாலபுரம், சின்னகளக்காட்டூர், தன்ராஜ்கண்டிகை உள்ளிட்ட கிராமங்களில் இருந்து, 30 பேரை குளவி கொட்டியது. அதில் 29 பேர் திருத்தணி திருவாலங்காடு கனகம்மாசத்திரம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். தன்ராஜ் கண்டிகையை சேர்ந்த மாதம்மா, 80, என்ற மூதாட்டி உயிரிழந்தார்.
ஜூன் 2ம் தேதி சந்தனவேணுகோபாலபுரம் கிராமத்தில் விறகு வெட்டும் பணிக்கு சென்ற மூவரை குளவி கடித்தது.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பனை மரம், காட்டு மரங்களில் விஷக்குளவிகள் கூடு கட்டுகின்றன. அவை குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தால் வந்து அழிப்பதில் அலட்சியம் காண்பிக்கின்றனர்.
தாழவேடு சின்னகளக்காட்டூரில் விஷக்குளவி கூடு கட்டியுள்ளது என தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தும் அலட்சியம் காண்பித்ததாக அப்பகுதிவாசிகள் கூறுகின்றனர்.
ஊராட்சி நிர்வாகத்திடம் கூறினால் தங்களுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை என கை விரிக்கின்றனர். இதனால் எங்கு புகார் தெரிவிப்பது என தெரியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
கிராம பகுதிகளில் பாம்பு, தேள் கடியால் அச்சமடைந்து வந்த மக்கள் தற்போது விஷக்குளவியால் பீதியில் உள்ளனர். அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை உயரதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.