/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பெண்கள் அரசு பள்ளி வளாகத்தில் பாம்புகள் உலா
/
பெண்கள் அரசு பள்ளி வளாகத்தில் பாம்புகள் உலா
ADDED : ஜூன் 11, 2025 09:23 PM
பொன்னேரி:பெண்கள் அரசு பள்ளி வளாகத்தில் பாம்புகள் உலா வருவதால் மாணவியர் அச்சமடைந்து உள்ளனர்.
பொன்னேரி, வேண்பாக்கம் பகுதியில், அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில், 1,500க்கும் மேற்பட்ட மாணவியர் படிக்கின்றனர். பள்ளி வளாகங்களில் ஆங்காங்கே செடி, கொடிகள் வளர்ந்து இருக்கின்றன. செடிகளில் இருந்து அவ்வப்போது, பாம்புகள் பள்ளி வளாகங்களுக்கு வந்து மாணவியரை அச்சுறுத்தி செல்கின்றன.
நேற்று முன்தினம் மாலை, எட்டு அடி நீளமுள்ள நாகப்பாம்பு பள்ளி வளாகத்தில் வந்ததால் மாணவியர் இடையே அச்சமும், பரபரப்பும் ஏற்பட்டது. பள்ளி ஆசிரியர்கள் பாம்பை அங்கிருந்து விரட்டினர். அது மீண்டும் செடியில் சென்று மறைந்தது. பாம்பை பிடிப்பதற்கான நடவடிக்கையில் பள்ளி நிர்வாகம் ஈடுபடாதது, பெற்றோர், சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
பள்ளி வளாகத்தில் பாம்புகள் வந்தால், அதை பிடிக்க வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதை விடுத்து, விரட்டியடித்தால், மீண்டும் அவை பள்ளி வளாகத்திற்கு வந்து மாணவியரை அச்சுறுத்துவதுடன், பாதுகாப்பும் கேள்விக்குறியாகும். பள்ளி வளாகத்தில் உள்ள செடிகளை அகற்றி, துாய்மையாக வைத்திருக்கவும், பாம்புகளை பிடிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.