/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வேலியே பயிரை மேய்கிறது போல நகராட்சி நிர்வாகமே பேனர் வைப்பு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
/
வேலியே பயிரை மேய்கிறது போல நகராட்சி நிர்வாகமே பேனர் வைப்பு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
வேலியே பயிரை மேய்கிறது போல நகராட்சி நிர்வாகமே பேனர் வைப்பு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
வேலியே பயிரை மேய்கிறது போல நகராட்சி நிர்வாகமே பேனர் வைப்பு சமூக ஆர்வலர்கள் அதிருப்தி
ADDED : ஜூலை 24, 2025 02:19 AM

பொன்னேரி:விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என எச்சரிப்பதற்காக, நகராட்சி நிர்வாகம் 'பேனர்' வைத்திருப்பது, சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
பொன்னேரி நகராட்சிக்கு உட்பட்ட திருவொற்றியூர் மாநில நெடுஞ்சாலையில் அம்பேத்கர் சிலை உள்ளது. இந்த சிலையை மறைக்கும் வகையில், பல்வேறு அரசியல் கட்சியினர், தனிநபர்கள் ராட்சத விளம்பர பேனர்களை வைக்கின்றனர்.
இது சமூக ஆர்வலர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் இடமாக இருப்பதாலும், பள்ளி மாணவர்கள் சென்று வரும் பகுதியாக இருப்பதாலும், விளம்பர பேனர்களால் அசம்பாவிதங்கள் ஏற்படும் அபாயம் இருந்தது.
இரண்டு மாதங்களுக்கு முன், சமூக ஆர்வலர்கள் மேற்கண்ட பகுதியில் விளம்பர பேனர்கள் வைப்பதற்கு தடை விதிக்க வேண்டும் எனக்கூறி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதை தொடர்ந்து, நகராட்சி நிர்வாகம், அப்பகுதியில் பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவித்தது. ஆனால், அரசியல் கட்சிகள் மற்றும் தனிநபர்களால் பேனர்கள் வைப்பது தொடர்ந்தது.
தற்போது நகராட்சி நிர்வாகம் 'டாக்டர் அம்பேத்கர் சிலை அருகில் விளம்பர பேனர்கள் வைக்க அனுமதி இல்லை. மீறினால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரித்து, அப்பகுதியில் பெரிய அளவிலான விளம்பர பேனர் வைத்துள்ளது.
'பேனர் வைக்கக்கூடாது என்பதற்கு ஒரு பேனரா' என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.
இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:
வழக்கமாக, அரசின் எச்சரிக்கை அறிவிப்புகள், இரும்பு தகரத்திலான ஷீட்டில் எழுதி வைக்கப்படும். விளம்பர பேனர்கள் வைக்கக்கூடாது என்பது நீதிமன்ற உத்தரவு. அதை மீறுபவர்கள் மீது சட்ட நடவடிக்கை தான் எடுக்க வேண்டும்.
ஆனால், நகராட்சி நிர்வாகம் அதை பின்பற்றுவதில்லை. பேனர் வைக்கக்கூடாது என எச்சரிப்பதற்கு, ஒரு பேனர் வைத்திருப்பது வேடிக்கையாக உள்ளது. நகராட்சி பகுதியில் அனுமதியின்றி வைக்கப்படும் பேனர்கள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.