/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அரசு பணி பெயரில் ஏரிகளில் மண் வளம்...கபளீகரம் எதிர்ப்பை மீறி ஒப்பந்ததாரர்கள் அடாவடி
/
அரசு பணி பெயரில் ஏரிகளில் மண் வளம்...கபளீகரம் எதிர்ப்பை மீறி ஒப்பந்ததாரர்கள் அடாவடி
அரசு பணி பெயரில் ஏரிகளில் மண் வளம்...கபளீகரம் எதிர்ப்பை மீறி ஒப்பந்ததாரர்கள் அடாவடி
அரசு பணி பெயரில் ஏரிகளில் மண் வளம்...கபளீகரம் எதிர்ப்பை மீறி ஒப்பந்ததாரர்கள் அடாவடி
ADDED : ஜூலை 14, 2025 10:51 PM

திருவள்ளூர் :அரசு பணி பெயரில் மண் எடுக்க ஏலம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிக ஆழத்தில் சவுடு மண் எடுத்து வருகின்றனர். பொதுமக்கள் எதிர்ப்பை மீறி, 20 - 30 அடி ஆழத்தில், ராட்சத இயந்திரங்களை வைத்து, மணல் எடுத்து வெளியிடங்களுக்கு விற்பனை செய்து வருவதால், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில், நீர்வள ஆதாரத்துறை கட்டுப்பாட்டில் 336, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் 581 என, மொத்தம் 917 ஏரிகள் உள்ளன. அவ்வப்போது ஏரிகளை ஆழப்படுத்த, அவற்றில் உள்ள மண்ணை எடுக்க நீர்வளம் மற்றும் கனிமவள துறையினர், அனுமதி வழங்கி வருகின்றனர்.
தற்போது, திருவள்ளூர் மாவட்டத்தில், மாமல்லபுரம் - காட்டுப்பள்ளி வெளிவட்ட சாலை, சித்துார் - தச்சூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம், திருவள்ளூர் - திருநின்றவூர் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட பல்வேறு சாலை பணிகள் நடைபெற்று வருகின்றன.
விண்ணப்பம்
மேலும், இண்டியன் ஆயில் கார்ப்பரேஷன், எண்ணுார் அனல்மின் நிலையம் உள்ளிட்ட அரசு நிறுவனங்களின் மேம்பாட்டு பணிகளும் நடைபெற்று வருகின்றன.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் சவுடு மண் அள்ள அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது அரசு பணிகளுக்காக, சவுடு மண் அள்ள அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக, மாவட்டம் முழுதும், 100 இடங்களில் சவுடு மண் எடுக்க, மாவட்ட கனிமவளத் துறையினருக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
தற்போது, சாலை பணிகளுக்காக புன்னப்பாக்கம், திருத்தணி, கல்பேடு உள்ளிட்ட, 40க்கும் மேற்பட்ட பகுதிகளில் குவாரி ஏலம் விடப்பட்டு உள்ளது. நான்கு ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மணல் விற்பனை குவாரி, ஆரணி மற்றும் நெமிலி அகரம் ஏரிகளில் சவுடு மண் எடுக்க, கடந்த மாதம் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது.
இந்நிலையில், அனுமதி வழங்கப்பட்ட ஏரிகளில், அரசு நிர்ணயித்த, 3 அடிக்கு பதிலாக 20 - 30 அடிக்கு மேல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. அரசு பணி என்ற பெயரில், தற்போது குவாரி அனுமதி பெறுவோர், தினமும் 500க்கும் மேற்பட்ட லோடு மண் எடுத்துச் செல்கின்றனர்.
ஆனால், அரசு பணி நடைபெறும் இடத்திற்கு, 100 லோடு மட்டுமே வழங்கி விட்டு, மற்றவற்றை கூடுதல் விலைக்கு வெளியே விற்பனை செய்து வருகின்றனர்.
அனுமதி
ஏரிகளில், 20 அடி வரை மண் மட்டுமே கிடைக்கும். அதற்கு மேல் தோண்டினால், மணல் கிடைக்கும் என்பதால், குவாரி உரிமம் எடுத்த ஒப்பந்ததாரர்கள், அரசு நிர்ணயித்த அளவைவிட அதிக ஆழத்தில் தோண்டி, மணல் எடுத்து, சென்னை மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும், கூடுதல் விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர்.
இதற்காக, நீர்வளத்துறை, கனிமவளம், வருவாய் மற்றும் காவல் துறையினரை 'கவனித்து' வருகின்றனர். மேலும், செங்கல் சூளைகளுக்காக தனியார் நிலத்தில் மண் எடுக்க அனுமதி பெற்று, அவர்களுக்கு வழங்காமல், கூடுதல் விலைக்கு வெளியிடங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். அரசு நிர்ணயித்த அளவைவிட, கூடுதல் லோடு மண் எடுக்கப்பட்டு வருகிறது.
கன்னிகைப்பேர் ஊராட்சியில், 650 ஏக்கரில் நீர்வளத்துறைக்கு சொந்தமான ஏரியில், தச்சூர் முதல் - ஆந்திர மாநிலம் சித்துார் வரை, ஆறு வழிச்சாலை பணிக்கு, சவுடு மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஏரியில் மண் அள்ள 55 நாட்களுக்கு அனுமதி அளித்துள்ள நிலையில், பத்து நாட்களுக்கும் மேலாக, ஏரியிலிருந்து ராட்சத இயந்திரங்கள் மூலம், 30 அடி ஆழத்துக்கு மண் எடுக்கப்பட்டுள்ளது. சில குறிப்பிட்ட இடத்தில், 30 அடிக்கு மேல் பள்ளம் தோண்டி மணல் கடத்தப்படுவதாக, சில நாட்களுக்கு முன், கிராம மக்கள் குவாரியை முற்றுகையிட்டனர்.
அங்கு மண் ஏற்றி வந்த லாரி மற்றும் 10க்கும் மேற்பட்ட 'ஹிட்டாச்சி' இயந்திரங்களையும் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே போல், திருவள்ளூர் அடுத்த நெமிலி அகரம் ஏரி குவாரியையும், கிராம மக்கள் முற்றுகையிட்டு, 'மண் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும்' என, எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
நடவடிக்கை வேண்டும்
அதே போல், மாவட்டத்தில் செயல்படும் சவுடு மண் குவாரிகளில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, ஒப்பந்ததாரர்கள் அடாவடியாக, அளவுக்கு அதிமாக மண் எடுத்து வருகின்றனர்.
எனவே, அனுமதி வழங்கப்பட்ட அளவிற்கு மண் எடுக்கவும், வெளியிடங்களுக்கு விற்பனை செய்வதை தடுக்கவும் கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குவாரி ஏலம் விடப்பட்ட அனைத்து ஏரிகளிலும், தனி குழு அமைத்து ஆய்வு செய்து, விதிமீறிய ஒப்பந்ததாரர் மீது கடும் நடவடிக்கை மற்றும் அபராதம் விதிக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.