/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சோலார் மின் இணைப்பு திட்டத்தில் 7,118 வீடுகள்.. இலக்கு திருவள்ளூரில் செயல்படுத்த 13 முகவர்கள் நியமனம்
/
சோலார் மின் இணைப்பு திட்டத்தில் 7,118 வீடுகள்.. இலக்கு திருவள்ளூரில் செயல்படுத்த 13 முகவர்கள் நியமனம்
சோலார் மின் இணைப்பு திட்டத்தில் 7,118 வீடுகள்.. இலக்கு திருவள்ளூரில் செயல்படுத்த 13 முகவர்கள் நியமனம்
சோலார் மின் இணைப்பு திட்டத்தில் 7,118 வீடுகள்.. இலக்கு திருவள்ளூரில் செயல்படுத்த 13 முகவர்கள் நியமனம்
ADDED : அக் 02, 2025 09:37 PM

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டத்தில், சூரிய ஒளி வீட்டு மின் இணைப்பு திட்டத்தை 7,118 வீடுகளில் அமைக்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. அனைத்து அரசு அலுவலகங்களிலும், சூரிய ஒளி மின்சாரம் தயாரிக்கும் பேனல் அமைக்கப்பட உள்ளது. திட்டத்தை செயல்படுத்த, பல்வேறு துறைகளை சேர்ந்த 10 பேர் கொண்ட நிர்வாக குழுவின் கீழ், 13 முகவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுதும், ஒரு கோடி வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் நோக்கத்துடன், சூரிய ஒளி இலவச மின்சார திட்டம் மத்திய அரசால், கடந்த 2024ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
வீடுகளின் கூரைகளில், சூரிய மின்சார அலகுகளை அமைப்பவர்கள், இத்திட்டத்தில் சேரலாம். சூரிய ஒளி மின்சாரத்தை தாயரிக்கும் இந்த அலகுகளை அமைக்கும் வீடுகள், ஒவ்வொரு மாதமும் 300 யூனிட் வரை மின்சாரத்தை இலவசமாக பெறலாம். இதற்காக, 75,021 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.
இத்திட்டத்தினை தமிழகத்திலும் செயல்படுத்த, முன்னெடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், திருத்தணி மற்றும் திருமழிசை ஆகிய மூன்று, மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகங்களை உள்ளடக்கி, திருவள்ளூர் மின்கோட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
இந்த கோட்டத்தில், 3,54,436 வீட்டு மின் இணைப்புகள் உள்ளன. அவற்றில், 55,120 வீடுகளில் 500 யூனிட்டிற்கு மேல், மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதையடுத்து, திருவள்ளுர் மாவட்டத்தில், சூர்ய ஒளி மின்சார திட்டம் குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில், சோலார் பேனல் அமைப்போருக்கு 30,000- 78,000 ரூபாய் வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது.
இந்த திட்டத்தினை செயல்படுத்த, கலெக்டர் தலைமையில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர், மின்வாரியம், வேளாண்மை, பொதுப்பணி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த, 10 பேர் கொண்ட நிர்வாக குழு நியமிக்கப்பட்டு உள்ளது. மேலும், இத்திட்டத்தை செயல்படுத்த, மாவட்டம் முழுதும் 13 முகவர்கள் நியமிக்கப்பட்டு உள்ளது.
சூரிய ஒளி மின்சார திட்டம் குறித்து கலெக்டர் பிரதாப் கூறியதாவது:
வீடுகளில் சூரிய மின் தகடுகள் அமைக்க, 2 கி.வாட் வரை 30,000 ரூபாய், அதற்கு மேல் அமைத்தால் 78,000 ரூபாய் மானியம் வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, ஒரு கிலோ வாட்டிற்கு, தினமும் 5 யூனிட் மின்சாரம் சேமிக்கலாம். மாதம் தோறும், 300 யூனிட் மின்சாரம் கிடைக்கும். இதன் வாயிலாக, வழக்கமாக செலுத்தும் மின்கட்டணம் சேமிக்க இயலும்.
பசுமை மின்சாரம், சோலார் கூரை அமைக்க வங்கி கடன் வசதியும் கிடைக்கும். திருவள்ளூர் மின்பகிர்மான வட்டத்தில், திருவள்ளூர்- 2,491, திருத்தணி- 1,068, திருமழிசை-3,559 என, மொத்தம் 7,118 வீடுகளில் சோலார் மின் தகடு அமைக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதுவரை 1,478 வீடுகளில், சோலார் மின் தகடு அமைக்கப்பட்டு உள்ளது. அவர்களுக்கு, 10 கோடி ரூபாய் மானியம், வழங்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்கள்
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்களிலும், சோலார் மின் தகடு அமைக்கப்பட உள்ளது. இதற்காக, அனைத்து அரசு அலுவலகங்களும், அறிவிப்பு வழங்கப்பட்டு, தமிழக அரசு வாயிலாக செயல்படுத்தப்படும், அறிவிப்பு வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், திருவள்ளூர் மாவட்ட மாதிரி சோலார் கிராமமாக, பூந்தமல்லி ஒன்றியம், நடுகுத்தகை கிராமம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலமாக, இத்திட்டம் செயல்படுத்தப்படும். அதன் பின், அதே போல், 5,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் தொகை கொண்ட கிராமங்களிலும், சோலார் மின் தகடு அமைக்கப்பட உள்ளது.
இதுகுறித்து, மாவட்டத்தில் நியமிக்கப்பட்ட 13 முகவர் மற்றும் அனைத்து துறை ஊழியர்களுடன் கலந்தாலோசனை செய்யப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், வீடுகளில் சோலார் மின் தகடு அமைக்க விரும்புவோர், www.pmsuryarghar.gov.in என்ற இணையதளத்தில், பதிவு செய்து பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
சோலார் மின்தகடு அமைக்கப்பட்ட வீடுகள் விவரம்: திருமழிசை-207 திருவள்ளூர்-127 திருத்தணி-40 ஆவடி-655 அம்பத்துார்-226 பொன்னேரி-85 போரூர்-138 மொத்தம்-1,478