/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம் வீண் ...முடக்கம்! :ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அலட்சியம்
/
திடக்கழிவு மேலாண்மை திட்டம் வீண் ...முடக்கம்! :ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அலட்சியம்
திடக்கழிவு மேலாண்மை திட்டம் வீண் ...முடக்கம்! :ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அலட்சியம்
திடக்கழிவு மேலாண்மை திட்டம் வீண் ...முடக்கம்! :ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் அலட்சியம்
ADDED : மார் 08, 2024 09:11 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டத்தில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் மண்புழு உரக்கொட்டகை மற்றும் உரக்கிடங்கு முடங்கியதில், 10.54 கோடி ரூபாய் வீணடிக்கப்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கும் திட்டம், திடக்கழிவு மேலாண்மை திட்டம், மட்கும் குப்பையில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கும் திட்டத்திற்கு 2017 -18ம் ஆண்டு தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் தலா 1 லட்சம் ரூபாய் மதிப்பில், 526 ஊராட்சிகளிலும் 5.26 கோடி ரூபாய் மதிப்பில் மண்புழு உரக்கொட்டகை அமைக்கப்பட்டது.
இந்த உரக்கொட்டகையில் அமைக்கப்பட்ட தொட்டிகளில் வீடுகளில் சேகரிக்கப்படும் மட்கும் குப்பையான காய்கறி, பழம், இலை போன்றவை கொட்டப்பட்டு, மண்புழுக்களை விட்டு, தொடர்ந்து 75 நாட்கள் மாட்டுச்சாணம் தெளித்து, பராமரித்தால் மண்புழு உரம் விற்பனைக்கு தயாராகி விடும் என்ற நோக்கில், மண்புழு உரக்கொட்டகை துவங்கப்பட்டது.
ஆனால், இந்த மண்புழு உரக்கொட்டகை அமைக்கப்பட்டு இன்று வரை பயன்பாட்டிற்கு வராமலேயே சேதமடைந்து வீணாகியுள்ளது, பகுதிவாசிகளிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளளது.
இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு திருவள்ளூர் மாவட்டத்தில் குப்பையிலிருந்து இயற்கை உரம் தயாரித்து விற்கும் திட்டத்தை கடம்பத்துார் ஒன்றியத்தில் கடம்பத்துார், வெங்கத்துார், மப்பேடு, பேரம்பாக்கம்.
சோழவரம், ஒன்றியத்தில் பாடியநல்லுார், நல்லுார், அலமாதி, சோழவரம். திருவள்ளூர் ஒன்றியத்தில் காக்களூர், பாக்கம், ஈக்காடு. வில்லிவாக்கம் ஒன்றியத்தில் மோரை, அடையாளம்பட்டு. பூந்தமல்லி ஒன்றியத்தில் காட்டுப்பாக்கம், செம்பரம்பாக்கம். கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் புதுகும்மிடிப்பூண்டி, கீழ்முதலம்பேடு.
ஆர்.கே.பேட்டை ஒன்றியத்தில் ஆர்.கே.பேட்டை, அம்மையார்குப்பம். பள்ளிப்பட்டு ஒன்றியத்தில் கொடிவலசா. எல்லாபுரம் ஒன்றியத்தில் கன்னிகைப்பேர். மீஞ்சூர் ஒன்றியத்தில் அத்திப்பட்டு என மொத்தம் 10 ஒன்றியங்களில் 22 ஊராட்சிகளில் செயல்படுத்த திட்டமிடப்பட்டு பணி துவங்கியது.
இதற்காக, 22 ஊராட்சிகளில் தலா 24 லட்சம் ரூபாய் மதிப்பில் 5.28 கோடி ரூபாய் மதிப்பில் உரக்கிடங்குகள் அமைக்கப்பட்டன. இந்த உரக்கிடங்குகள் இன்று வரை பயன்பாட்டிற்கு வராமல் வீணாகி வருகின்றன.
இதற்கு ஒன்றிய அதிகாரிகள் சரியான திட்டமிடல் இல்லாமல் பணிகள் துவக்கியதே காரணம் எனவும் இதனால், அரசு பணம் 10.54 கோடி ரூபாய் வீணானது எனவும் சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஊராட்சிகளில் சேகரமாகும் குப்பையை முறையாக அகற்றாமல் நெடுஞ்சாலையோரம் தீயிட்டு கொளுத்தி வருவதை துப்புரவு பணியாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால், நெடுஞ்சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் கடும் சிரமப்படுவதோடு விபத்தில் சிக்கும் நிலையும் ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.