/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பேருந்து சேவை நிறுத்தம் பள்ளி மாணவர்கள் தவிப்பு
/
பேருந்து சேவை நிறுத்தம் பள்ளி மாணவர்கள் தவிப்பு
ADDED : பிப் 15, 2024 11:45 PM
திருவாலங்காடு:திருவள்ளூர் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டு வீரராகவபுரம் வியாசபுரம் புண்டரீகபுரம் வீரக்கோவில் உட்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் அரக்கோணத்தில் பயின்று வருகின்றனர்.
இந்த நெடுஞ்சாலை வழியாக காலை, மாலை நேரங்களில் இயக்கப்பட்டு வந்த திருவாலங்காடு - அரக்கோணம் வரை இயக்கப்பட்ட தடம் எண் டீ4 மற்றும் அரக்கோணம் - பூந்தமல்லி வரை இயக்கப்பட்ட தடம் எண் 86 பேருந்துகள் நான்கு ஆண்டுகளுக்கு முன் நிறுத்தப்பட்டன. இதனால் போதிய அரசு பேருந்துகள் இல்லாததால் மாணவ - மாணவியர் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
அரசு வழங்கிய இலவச பஸ் பாஸ் இருந்தும், ஷேர் ஆட்டோக்களில் கட்டணம் செலுத்தி பள்ளிக்கு சென்று வருகின்றனர். சில நேரங்களில், இவ்வழியே செல்லும் இரு சக்கர வாகனங்களில், 'லிப்ட்' கேட்டு செல்கின்றனர்.
இதனால், மாணவர்கள் விபத்தில் சிக்கியும், காயமடைந்து வருவதும் வாடிக்கையாக நடந்து வருகிறது. எனவே, மாவட்ட நிர்வாகம் நிறுத்தப்பட்ட பேருந்துகளை இயக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவ - மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.