/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
15 பேரை துரத்தி துரத்தி கடித்த தெருநாய் செங்குன்றத்தில் தெறித்து ஓடிய மக்கள்
/
15 பேரை துரத்தி துரத்தி கடித்த தெருநாய் செங்குன்றத்தில் தெறித்து ஓடிய மக்கள்
15 பேரை துரத்தி துரத்தி கடித்த தெருநாய் செங்குன்றத்தில் தெறித்து ஓடிய மக்கள்
15 பேரை துரத்தி துரத்தி கடித்த தெருநாய் செங்குன்றத்தில் தெறித்து ஓடிய மக்கள்
ADDED : அக் 15, 2025 11:12 PM
செங்குன்றம்: செங்குன்றத்தில் நேற்று காலையில், நடைபயிற்சி மற்றும் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்த 15 பேரை, அப்பகுதியில் திரியும் வெறிபிடித்த தெருநாய் துரத்தி துரத்தி கடித்தது. நாய்க்கடிக்கு உள்ளானவர்கள், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். நாயை பார்த்த பீதியில் பலரும் தலைதெறிக்க ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
செங்குன்றம், காய்கறி சந்தை எதிரே பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்போர், நடைபயிற்சி, பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க, நேற்று அதிகாலை சாலையில் சென்றனர்.
இந்நிலையில், அப்பகுதி தெருவில் சுற்றித்திரியும் வெறிநாய், திடீரென அவர்களை விரட்டி விரட்டி கடித்தது. இதில் ராஜேந்திரன், 62, தரணி, 50, கோபாலகிருஷ்ணன், 60, உட்பட 15 பேர், நாய்க்கடிக்கு ஆளாகினர். இருசக்கர வாகனத்தில் சென்றோரையும் அந்த வெறிநாய் விட்டுவைக்கவில்லை; நாய் துரத்தியதால் பலரும் தலைதெறிக்க ஓடினர்.
நாய்க்கடியால் பாதித்தோர், அருகே உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டனர். சிலர் மேல் சிகிச்சைக்காக, அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
சென்னை மாநகராட்சி மற்றும் நாரவாரிகுப்பம் பேரூராட்சி நிர்வாகத்திற்கு, பகுதி மக்கள் புகார் அளித்தனர்.
நாரவாரிகுப்பம் பேரூராட்சியில் நாய் பிடிக்க போதுமான வசதி இல்லாததால், உடனடியாக சென்னை மாநகராட்சி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து, நேற்று மதியம் 2:00 மணிக்கு, வெறிபிடித்த நாயை ஊழியர்கள் பிடித்துச் சென்றனர். பிடிபட்ட நாய்க்கு இதுவரை தடுப்பூசி செலுத்தவில்லை என கூறப்படுகிறது.
பிள்ளையார் கோவில் தெருவில் வசிப்போர், வீடுகளில் மீதமாகும் உணவை, சாலையில் உள்ள பூங்கா அருகே கொட்டிச் செல்கின்றனர். அதை உண்டு வாழும் 20க்கும் மேற்பட்ட நாய்கள், அச்சுறுத்தும் வகையில் திரிவதால், அப்பகுதியில் வசிப்போருக்கு பீதி ஏற்பட்டுள்ளது.