/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறுகலான தேர்வாய் கண்டிகை சாலையால் திணறல்! சிப்காட் தொழிற்சாலை வாகனங்கள் தவிப்பு
/
குறுகலான தேர்வாய் கண்டிகை சாலையால் திணறல்! சிப்காட் தொழிற்சாலை வாகனங்கள் தவிப்பு
குறுகலான தேர்வாய் கண்டிகை சாலையால் திணறல்! சிப்காட் தொழிற்சாலை வாகனங்கள் தவிப்பு
குறுகலான தேர்வாய் கண்டிகை சாலையால் திணறல்! சிப்காட் தொழிற்சாலை வாகனங்கள் தவிப்பு
ADDED : ஆக 26, 2024 11:14 PM

கும்மிடிப்பூண்டி:தேர்வாய் கண்டிகை சாலை குறுகலாக இருப்பதால், கனரக வாகனங்கள் எதிர் எதிரே ஆபத்தான முறையில் கடந்து வருகின்றன. அந்த சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கும்மிடிப்பூண்டி தாலுகாவிற்கு உட்பட்ட தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகம், 2010ம் ஆண்டு, 1, 127 ஏக்கர் பரப்பளவில் துவங்கப்பட்டது. தற்போது, 46 தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.
அங்குள்ள தொழிற்சாலைகளுக்கு கன்டெய்னர் லாரிகள், சரக்கு லாரிகள் உட்பட தினசரி, 400க்கும் மேற்பட்ட கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன.
பெரும்பாலான கனரக வாகனங்கள் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருந்து வருவதால், பெரியபாளையம் சாலை வழியாக வருகின்றன.
இருப்பினும் கும்மிடிப்பூண்டி மற்றும் ஆந்திர உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்து வரும் கனரக வாகனங்கள், கவரைப்பேட்டை -சத்தியவேடு சாலை வழியாக வந்து செல்கின்றன.
அந்த சாலை வழியாக தினசரி, நுாற்றுக்கும் மேற்பட்ட வாகனங்கள், தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலைகளுக்கு வருகின்றன.
கவரைப்பேட்டையில் இருந்து சத்தியவேடு நோக்கி செல்லும் சாலையில், 14வது கி. மீட்டரில் பூவலம்பேடு சந்திப்பு உள்ளது.
அங்கிருந்து இடதுபுறம் திரும்பும் சாலையில், 7.5 கி.மீ., தொலைவில் தேர்வாய் கண்டிகை சிப்காட் வளாகம் அமைந்துள்ளது. மேற்கண்ட, 7.5 கி.மீ., சாலை, மாநில நெடுஞ்சாலை துறையின் பிற மாவட்ட சாலை வகையை சேர்ந்தது.
அந்த சாலை தற்போது, 3.75 மீட்டர் அகலம் மட்டுமே இருப்பதால், எதிர் எதிரே இரு கனரக வாகனங்கள் கடந்து செல்வது என்பது மிகுந்த சவாலாக உள்ளது.
ஒரு சில இடங்கள் மிகவும் குறுகலாக இருப்பதால், சற்று அசந்தால் கூட சாலையோர பள்ளத்தில் கனரக வாகனங்கள் கவிழும் அபாயம் உள்ளது.
அந்த சாலையில் தற்போது வாகன போக்குவரத்து குறைவாக இருந்தாலும், மாநெல்லுார் சிப்காட் திட்டம் துவங்கப்பட்டால், கனரக வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்து, அந்த சாலை பரபரப்பாக மாறிவிடும்.
தற்போது உள்ள சூழலை கருத்தில் கொண்டு அந்த சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்ற மாநில நெடுஞ்சாலைத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்வாய் கண்டிகை சிப்காட் தொழிற்சாலை நிர்வாகத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இது குறித்து சம்பந்தப்பட்ட மாநில நெடுஞ்சாலைத் துறை அலுவலர் ஒருவர் கூறியதாவது:
நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் என்றால் நில எடுப்பு பணிகள் மேற்கொள்ள வேண்டும். அதனால், 3.75 மீட்டர் அகலம் உள்ள சாலையை, 7 மீட்டர் சாலையாக விரிவாக்கம் செய்ய திட்டம் வகுத்துள்ளோம்.
விரைவில் திட்ட அறிக்கை தயாரித்து அனுப்பப்படும். நிதி ஒதுக்கியதும், சாலை வரிவாக்க பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.