/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குறைவான பஸ் இயக்கம் மாணவ, மாணவியர் அவதி
/
குறைவான பஸ் இயக்கம் மாணவ, மாணவியர் அவதி
ADDED : ஜன 29, 2025 07:08 PM
கடம்பத்துார்:திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்கட்பட்ட போளிவாக்கம் ஊராட்சி.
போளிவாக்கம் மற்றும் சுற்றியுள்ள இலுப்பூர், வலசை வெட்டிக்காடு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 250க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மேல்நல்லாத்துார், மணவாளநகர், திருவள்ளூர் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு பள்ளி மற்றும் கல்லுாரிகளில் படித்து வருகின்றனர்.
மேலும் 200க்கும் மேற்பட்ட பகுதிவாசிகள் பணி நிமித்தமாக இவ்வழியே இயக்கப்படும் விழுப்புரம் கோட்ட அரசு பேருந்து மற்றும் மாநகர பேருந்துகளை பயன்படுத்தி திருவள்ளூர், ஸ்ரீபெரும்புதுார் சென்று வருகின்றனர்.
இந்த நெடுஞ்சாலை வழியே குறைவான பேருந்துக்கள் இயக்கத்தால் பகுதிவாசிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.
குறிப்பாக காலை, மாலை நேரங்களில் போதிய பேருந்துகள் இயங்காததால் மாணவ, மாணவியர் பள்ளி கல்லுாரி செல்லும் நேரங்களில் சிரமப்பட்டு வருகின்றனர்.
இலவச பயண அட்டை இருந்தும் சில நேரங்களில் பணம் கொடுத்து தனியார் பேருந்து, தொழிற்சாலை பேருந்து,ஷேர் ஆட்டோக்களில் செல்லும் நிலை ஏற்படுகிறது.
எனவே, மாவட்ட நிர்வாகம் இவ்வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென பகுதிவாசிகள் மற்றும் மாணவ, மாணவியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

