/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
அமரந்தாங்கல் ஏரியில் சர்க்கரை ஆலை கழிவுநீர்...கலப்பு!:நிலங்கள் பாழாவதாக விவசாயிகள் கொதிப்பு
/
அமரந்தாங்கல் ஏரியில் சர்க்கரை ஆலை கழிவுநீர்...கலப்பு!:நிலங்கள் பாழாவதாக விவசாயிகள் கொதிப்பு
அமரந்தாங்கல் ஏரியில் சர்க்கரை ஆலை கழிவுநீர்...கலப்பு!:நிலங்கள் பாழாவதாக விவசாயிகள் கொதிப்பு
அமரந்தாங்கல் ஏரியில் சர்க்கரை ஆலை கழிவுநீர்...கலப்பு!:நிலங்கள் பாழாவதாக விவசாயிகள் கொதிப்பு
ADDED : டிச 29, 2024 02:03 AM

திருவாலங்காடு:திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அரவையின் போது வெளியேறும் கழிவுநீர், சக்கரமநல்லூரில் அமைந்துள்ள அமரந்தாங்கல் ஏரியில் கலப்பதால்,ஏரி பாழாகி விவசாயத்துக்கு தகுதியற்றதாகி உள்ளதாகவும், நீரை பயன்படுத்த முடியவில்லை எனவும், அப்பகுதி விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை, 1984ம் ஆண்டு முதல், இயங்கி வருகிறது. இந்த ஆலையில், அரக்கோணம், திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, ஊத்துக்கோட்டை, பேரம்பாக்கம், திருவாலங்காடு ஆகிய ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து, டிராக்டர், லாரி வாயிலாக கரும்பு வரவழைக்கப்பட்டு அரவை செய்யப்படுகிறது.
நடப்பாண்டிற்கான அரவை இலக்கு 2 லட்சம் டன்னாக நிர்ணயித்து, கடந்த நவம்பர் இறுதியில் அரவை துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்த ஆலையில் அரவையின் போது வெளியேறும் கழிவுநீரை ஆலையில் உள்ள குளத்தில் தேக்கி, பின் சுத்திகரிப்பு செய்து பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், ஆலையில் சுத்திகரிப்பு செய்யும் இயந்திரம் பராமரிப்பில்லாததால், 10 ஆண்டுகளாக பயன்பாடின்றி உள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், 10 ஆண்டுகளாக ஆலையில் அரவையின் போது வெளியேறும் கழிவுநீர், நேரடியாக அருகே சக்கரமநல்லூரில் உள்ள அமரந்தாங்கல் ஏரியில் விடப்படுவதாகவும், இதனால் ஏரிநீர் மாசடைந்து தற்போது பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
மேலும், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் ஏரியில் கலப்பதாக, அப்பகுதி விவசாயிகள் 2022ம் ஆண்டு டிசம்பரில், திருவள்ளூர் மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரியிடம் புகார் மனு அளித்தனர்.
கூட்டுறவு சர்க்கரை ஆலையில் அதிகளவில் மாசு ஏற்படும் என்பதால், சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாசு கட்டுப்பாடு மண்டல இணை தலைமை பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்று பின், தலைமை பொறியாளர் மற்றும் அலுவலர்கள் தலைமையிலான குழு, 2023ம் ஆண்டு ஜனவரியில் நேரில் வந்து ஆய்வு செய்தனர். பின் சர்க்கரை ஆலை தரப்பில் மழைக்காலத்தில் ஆலை கழிவுநீர் தேங்கும் குளம் நிரம்பி, மழைநீருடன் சேர்ந்து ஏரியில் கலப்பதாகவும், அதை சீரமைக்க நடவடிக்கை எடுப்பதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால், இதுவரை ஆலை தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என, விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, சக்கரமநல்லூரைச் சேர்ந்த விவசாயிகள் கூறியதாவது:
ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர், விவசாய நிலங்கள் மீது பாய்ந்து, பின் ஏரியில் கலக்கிறது. இந்த கழிவுநீரை விவசாய நிலத்துக்கு பாய்ச்சினால் அடுத்த நாள் பயிர் கருகி போகிறது. 10 ஆண்டுகளாக ஏரிநீரை பயன்படுத்துவதை நிறுத்தி விட்டோம்.
தற்போது ஏரி நீர் மாசு கலந்து நிறம் மாறி உள்ளது. இந்த நீரை கால்நடைகள், பறவைகள் பருகினால் உயிர் பலி ஏற்படும் அபாயம் உள்ளது.
தற்போது ஏரி பக்கம் சென்றாலே கடும் துர்நாற்றம் வீசி வருகிறது. ஏரி பாசனம் இல்லாததால், பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பாடின்றி உள்ளது.
இதுகுறித்து சர்க்கரை ஆலை அதிகாரிகளிடம் பலமுறை முறையிட்டோம். அதிகாரிகள் முறையாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இதுகுறித்து திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் அரவை துவங்கும் முன் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த பின்னே அரவை துவங்க முடியும்.
ஆலையில் ஒரு நாளைக்கு 70 ஆயிரம் லிட்டர் நீர் பயன்படுத்தப்படுகிறது. அதை சுத்திகரிக்கப்பட்ட பின் ஆலைக்குள் உள்ள குளத்தில் தேங்கும் படி செய்துள்ளோம்.
தேங்கிய பின் வெளியேறும் நீர் சுத்திகரிக்கப்பட்ட பின்னே வெளியேற்றப்படுகிறது. ஏரியில் நேரடியாக கலப்பதில்லை. ஆலை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.
சுத்திகரிக்கப்பட்ட நீரும் வெளியில் செல்லாதபடி நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.