/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம் ஆந்திர ஆலைக்கு விற்றால் எப்.ஐ.ஆர்., நிச்சயம்
/
திருத்தணி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம் ஆந்திர ஆலைக்கு விற்றால் எப்.ஐ.ஆர்., நிச்சயம்
திருத்தணி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம் ஆந்திர ஆலைக்கு விற்றால் எப்.ஐ.ஆர்., நிச்சயம்
திருத்தணி சர்க்கரை ஆலையில் கரும்பு அரவை துவக்கம் ஆந்திர ஆலைக்கு விற்றால் எப்.ஐ.ஆர்., நிச்சயம்
ADDED : அக் 25, 2025 11:10 PM

திருவாலங்காடு: திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் நடப்பாண்டுக்கான கரும்பு அரவை இலக்காக, 2 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டு, அரவையை நேற்று முன்தினம் அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார். ஆந்திர மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைக்கு கரும்பை விற்கும் விவசாயிகள் மற்றும் வாகன உரிமையாளர் மீது வழக்கு பதியப்படும் என, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடில், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை 40 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்த ஆலைக்கு அரக்கோணம், திருவாலங்காடு, திருத்தணி, பள்ளிப்பட்டு உட்பட ஏழு கரும்பு கோட்டங்களில் இருந்து, டிராக்டர் மற்றும் லாரி வாயிலாக கரும்பு கொண்டு வரப்பட்டு அரவை செய்யப் படுகிறது.
நிர்ணயம் தினமும் 1,800 - 2,100 டன் கரும்பு அரவை செய்யப்படும். தற்போது, 2025 - -26ம் ஆண்டுக்கான கரும்பு அரவை இலக்காக, 2 லட்சம் டன் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2,501 விவசாயிகளிடம் இருந்து, 7,505 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்ட கரும்புகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
கரும்பை அறுவடை செய்ய ஏழு அறுவடை இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. கடந்த அறுவை பருவத்தில், 1,526 விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட 1.55 லட்சம் கரும்பு, டன்னுக்கு 3,151 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டது.
அதன்படி, 49.1 கோடி ரூபாய் விடுவிக்கப்பட்டு, அவர்கள் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும், அதேபோல் ஊக்கத்தொகையாக டன் ஒன்றுக்கு 349 ரூபாய் வீதம், 5.34 கோடி ரூபாய் வழங்கப்பட்டது.
வழக்கு பதிவு நடப்பாண்டிற்கான கரும்பு அரவையை நேற்று முன்தினம் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நாசர் துவக்கி வைத்தார்.
திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன், திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் மீனா, கரும்பு விவசாயிகள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதையடுத்து, அமைச்சர் நாசரிடம், கரும்பு விவசாயிகள், 'ஆலையை நவீனப்படுத்த வேண்டும். தேர்தல் வாக்குறுதியின்படி, 1 டன் கரும்புக்கு 4,000 ரூபாய் வழங்க வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி மனு அளித்தனர்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை செயலாட்சியர் மீனா கூறுகையில், “வரும் ஆண்டில் கூடுதலாக கரும்பு பயிரிடவும், மகசூல் பெறவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கரும்பு ஏற்றி வரும் டிராக்டர்கள், ஆலை வளாகத்தில் மட்டுமே நிறுத்த வேண்டும்.
“வெளியே சாலையோரங்களில் நிறுத்தக்கூடாது. ஆந்திராவுக்கு கரும்பு விற்பனை செய்தால், கரும்பை விற்ற விவசாயி மற்றும் டிராக்டர் உரிமையாளர் மீது வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும்,” என்றார்.
முதல்வர் கவனத்திற்கு
கொண்டு செல்வேன்
கரும்பு டன்னுக்கு, 4,000 ரூபாய் கோரும் விவசாயிகளின் கோரிக்கை குறித்தும், ஆலையை மேம்படுத்துவது குறித்தும், ஆலையில் நிரந்தர பணியாளர் பற்றாக்குறை குறித்தும், சம்பந்தப்பட்ட துறை அமைச்சர், முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும். - நாசர், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்.

