/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சுருட்டப்பள்ளி அணைக்கட்டு நிரம்பியது
/
சுருட்டப்பள்ளி அணைக்கட்டு நிரம்பியது
ADDED : அக் 19, 2024 07:30 PM
ஊத்துக்கோட்டை:ஆந்திர மாநிலத்தில் உருவாகும் ஆரணி ஆற்று நீரை பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சேகரிக்கப்படுகிறது. பின் உபரிநீர் ஆரணி ஆற்றின் வழியே, சுருட்டப்பள்ளி அணைக்கட்டிற்கு வருகிறது. இந்த சுருட்டப்பள்ளி அணைக்கட்டு கடந்த, 1954ம் ஆண்டு கட்டப்பட்டது. நந்தனம் மற்றும் சுற்றியுள்ள மலைப் பகுதிகளில் பெய்யும் மழைநீர் கால்வாய் வழியே, சுருட்டப்பள்ளி அணைக்கட்டிற்கு வந்து சேர்கிறது.
இங்கு, 300 மில்லியன் கன அடிநீர் சேகரிக்கப்படும். இதன் மூலம் சுற்றியுள்ள, 5 கி.மீட்டர் துாரத்திற்கு நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து குடிநீர், விவசாயத்திற்கு பற்றாக்குறை இல்லாத நிலை ஏற்படும். மேலும், இந்த அணைக்கட்டில் இருந்து ஐந்து மதகுகள் வாயிலாக, ஊத்துக்கோட்டை, பேரண்டூர், லட்சிவாக்கம் உள்ளிட்ட முக்கரம்பாக்கம் வரை, 15 ஏரிகளுக்கு, தண்ணீர் செல்லும் வகையில் கால்வாய் உள்ளது.
சமீபத்தில் வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக பெய்த மழையால் சுருட்டப்பள்ளி அணைக்கட்டிற்கு நீர் வரத்து ஏற்பட்டது. தற்போது முழுதும் நிரம்பி உபரி நீர் ஆரணி ஆற்றில் செல்கிறது.
பிச்சாட்டூர் ஏரியில் நீர் குறைப்பு
* ஆந்திர மாநிலத்தில் உருவாகி வரும் ஆரணி ஆறு, பிச்சாட்டூர் கிராமத்தில் உள்ள ஏரியில் சேகரிக்கப்படுகிறது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு, 1.85 டி.எம்.சி., நீர்மட்டம், 31 அடி. கடந்த, 15ம் தேதி ஏரியின் நீர் இருப்பு 0.546 டி.எம்.சி., நீர்மட்டம், 18.9 அடி. இதன் பின் வங்கக் கடலில் உருவான புயல் காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தின் தமிழக -- ஆந்திர எல்லையில் பலத்த மழை பெய்தது.
பிச்சாட்டூர் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்ததால், ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்தது. நீர்மட்டம், ‛கிடுகிடு'வென உயர்ந்தது. சமீபத்தில் புயல் கரையை கடந்ததால், மழை பொழிவு நின்றது. இதனால் நீர்வரத்து குறைந்தது. நேற்று காலை, 6:00 மணி நிலவரப்படி, மழைநீர் வரத்து வினாடிக்கு, 550 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
ஏரியில் தற்போது, 0.902 டி.எம்.சி., நீர் உள்ளது. நீர்மட்டம், 23.10 அடி. புயல் காரணமாக மழை பெய்ததில், 400 மில்லியன் கன அடி நீர் ஏரிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.