/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் புதிய வீடுகள் குறித்து கணக்கெடுப்பு சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுக்கு கிடுக்கி
/
திருத்தணியில் புதிய வீடுகள் குறித்து கணக்கெடுப்பு சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுக்கு கிடுக்கி
திருத்தணியில் புதிய வீடுகள் குறித்து கணக்கெடுப்பு சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுக்கு கிடுக்கி
திருத்தணியில் புதிய வீடுகள் குறித்து கணக்கெடுப்பு சொத்து வரி செலுத்தாமல் ஏமாற்றுபவர்களுக்கு கிடுக்கி
ADDED : நவ 24, 2024 03:19 AM
திருத்தணி, திருத்தணி நகராட்சியில், பெரும்பாலானோர் புதிதாக வீடுகள் கட்டியவர்கள், சொத்து வரி செலுத்தாமல் பல மாதங்களாக காலம் தாழ்த்தி வருகின்றனர். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் வருவாய் அதிகரிக்கவும், புதிய வீடுகளுக்கு வரி நிர்ணயம் செய்து வசூலிக்கவும் தனிக்குழு அமைத்து, தீவிரம்காட்டி வருகிறது.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில், 13,498 பேர் சொத்து வரியும், 2,539 பேர் காலிமனை வரியும், 89 பேர் தொழில் வரியும், 1,592 பேர் குடிநீர் வரியும்,நகராட்சியின் கடைகளுக்கு, 156 பேர் வாடகையும், 12,386 பேர் திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு சர்வீஸ் கட்டணம் என ஆண்டுக்கு, 6.07 கோடி ரூபாய் நகராட்சி நிர்வாகம் வசூலிக்கிறது.
இந்த நிதியின் மூலம் நகராட்சி மக்களின் குடிநீர், கால்வாய், மின்விளக்கு போன்ற அடிப்படை வசதிகள் மற்றும் பல்வேறு வளர்ச்சி பணிகள் நகராட்சி நிர்வாகம் செய்து வருகிறது.
இந்நிலையில், நகராட்சியில் புதிய வீடுகள் கட்டுபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும், பலர் வீடுகள் கட்டி பல மாதங்கள் ஆகியும் நகராட்சிக்கு சொத்துவரி, குடிநீர் கட்ட ணம் செலுத்தாமல் உள்ளனர். மேலும், சிலர் காலிமனை வரியும் செலுத்தாமல் உள்ளனர். இதனால் நகராட்சிக்கு கணிசமான வருவாய் இழப்பீடுஏற்படுகிறது.
இதையடுத்து நகராட்சி நிர்வாகம், 21 வார்டுகளில் வரி செலுத்தாத வீடுகள் குறித்து கணக்கெடுப்பதற்கும், புதிதாக வரி நிர்ணயம் செய்து வசூலிப்பதற்கும் ஒரு தனிக்குழு அமைத்து, அனைத்து வார்டுகளுக்கும் சென்று கணக்கெடுத்து வருகின்றனர்.
இதுவரை வரி செலுத்தாத வீட்டின் உரிமையாளர்களுக்கு நகராட்சி ஊழியர்கள் எச்சரிக்கை விடுத்தும், வரி நிர்ணயம் செய்து வசூலிக்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். இதனால் நகராட்சி வருவாய் கணிசமாக உயரும்.
தற்போது, நகராட்சியில், 2,000 வீடுகளுக்கு வரி நிர்ணயம் செய்யாமல் வரி செலுத்தாமல் உள்ளதாக கூறப்படுகிறது.
இது குறித்து திருத்தணி நகராட்சி ஆணையர்பாலசுப்பிரமணியம்கூறியதாவது:
நகராட்சியில் பலர் நகராட்சி அனுமதியின்றி வீடுகள் கட்டி வருகின்றனர்.
வீடுகள் கட்டுவதற்கு முன் காலிமனை வரி செலுத்திய பின் தான் வீடுகள் கட்ட வேண்டும். இதுதவிர புதிதாக வீடுகள் கட்டியவர்கள் பலர் சொத்து வரி செலுத்துவதற்கு ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.
எனவே, கடந்த ஒரு மாதமாக நகராட்சி வருவாய் ஆய்வாளர் தலைமையில், மூன்று பில் கலெக்டர்கள் மற்றும் நான்கு இளநிலை உதவியாளர்கள் என,எட்டு பேர் கொண்ட தனிக்குழு அமைத்து, வரி செலுத்தாத வீடுகள் குறித்து கணக்கெடுத்து வருகிறோம்.
இதுவரை, 237 வீடுகள் கண்டறிந்து புதிதாக வரி நிர்ணயம் செய்து வசூலிக்கப்பட்டுள்ளது. வரி செலுத்தாத வீடுகளுக்கு குடிநீர் இணைப்புதுண்டிப்பதுடன், ஜப்தி நோட்டீஸ் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி நகராட்சி வருவாய் ஆய்வாளர்,நரசிம்மன் கூறியதாவது:
நகராட்சி பகுதியில் உள்ள காலிமனைகள் ஏ, பி, மற்றும் சி என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு சதுரடிக்கு,40, 60 மற்றும் 80 பைசா வீதம் வரி வசூலிக்கப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு ஒரு முறை காலிமனைக்கு வரி செலுத்த வேண்டும்.
முதலாவதாக காலிமனை வரி நிர்ணயம் செய்து வரி செலுத்தும் போது, ஆறரை ஆண்டுகளுக்கு கணக்கிட்டு வசூலிக்கப்படும். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வரி வசூலிக்கப்படும்.
இவ்வாறு அவர்கூறினார்.

