/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குடிநீர் பணியால் தார்ச்சாலை சேதம் கான்கிரீட் சாலை மட்டும் புதுப்பிப்பு
/
குடிநீர் பணியால் தார்ச்சாலை சேதம் கான்கிரீட் சாலை மட்டும் புதுப்பிப்பு
குடிநீர் பணியால் தார்ச்சாலை சேதம் கான்கிரீட் சாலை மட்டும் புதுப்பிப்பு
குடிநீர் பணியால் தார்ச்சாலை சேதம் கான்கிரீட் சாலை மட்டும் புதுப்பிப்பு
ADDED : செப் 25, 2025 01:45 AM

திருத்தணி:திருத்தணி நகராட்சியில், கூட்டுக்குடிநீர் திட்ட பணிகளால், கான்கிரீட் மற்றும் தார்ச்சாலைகள் சேதமடைந்துள்ளன. தற்போது, கான்கிரீட் சாலைகள் மட்டும், 13.27 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணி துவங்கியுள்ளது. 'தார்ச்சாலைகளை சீரமைக்க நிதி ஒதுக்கீடு இல்லை' என, நகராட்சி நிர்வாகம் சமாளிக்கிறது.
திருத்தணி நகராட்சியில், 21 வார்டுகளில் நிலவி வந்த குடிநீர் பிரச்னைகளை நிரந்தரமாக தீர்க்க, 2020ம் ஆண்டு, 110 கோடி ரூபாய் மதிப்பில், திருப்பாற்கடல் கூட்டுக்குடிநீர் கொண்டு வருவதற்கு திட்டம் வகுத்து, பணிகள் நடந்தது.
இதில், வீடுகள், வணிக வளாகங்களுக்கும் கூட்டுக்குடிநீர் இணைப்பு வழங்குவதற்காக, 250 கான்கிரீட் சாலைகள், 180 தார்ச்சாலைகள், 41 மண் சாலைகள் என, 471 தெருக்கள் சேதப் படுத்தி குழாய்கள் அமைக்கப்பட்டன.
இதனால், பெரும் பாலான சாலைகள் குண்டும், குழியுமாக மாறியதால், வாகன ஓட்டிகள் கடும் சிரமப்பட்டு வந்தனர். கடந்த பிப்ரவரி மாதம், கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகள் முழுமை பெற்று, நகர மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
ஆனால், சேதமடைந்த சாலைகளை சீரமைக் காததால், வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்துக் குள்ளாகி தவித்து வந்தனர்.
கடந்த ஒன்றரை மாதத்திற்கு முன், சேதமடைந்த 186 கான்கிரீட் சாலைகளை, நகர்ப்புற மேம்பாடு திட்டத்தின் கீழ், 13.27 கோடி ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கும் பணிகள் துவங்கியுள்ளது.
ஆனால், தார்ச்சாலைகள் சீரமைப்பதற்கு போதிய நிதி இல்லை என, நகராட்சி நிர்வாகம் சமாளித்து வருகிறது.
திருத்தணியில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை, அரசு அலுவலகங்கள் மற்றும் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி போன்ற இடங்களுக்கு செல்லும் தார்ச்சாலைகள் குண்டும், குழியுமாக மாறியுள்ளன.
எனவே, கான்கிரீட் சாலைகளை புதுப்பிப்பது போல், தார்ச்சாலைகளையும் சீரமைக்க வேண்டும் என, நகராட்சி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, நகராட்சி அதிகாரி கூறியதாவது:
கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளுக்கு சேதப்படுத்திய அனைத்து வகை சாலைகளையும் சீரமைக்க, 25 கோடி ரூபாயும், சேதமடைந்த மழைநீர் வடிகால்வாய் சீரமைக்க, 15 கோடி ரூபாய் என, மொத்தம் 40 கோடி ரூபாய் தேவை என, திட்ட மதிப்பீடு தயாரித்து, அரசுக்கு பரிந்துரை செய்தோம்.
ஆனால், 186 கான்கிரீட் சாலைகளை சீரமைக்க, 13.27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்தது. அந்த நிதியில் புதுப்பிக்கும் பணி நடந்து வருகிறது. தார்ச்சாலை சீரமைப்பதற்கு நிதி ஒதுக்கீடு செய்தால், உடனே சீரமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாலை பணிகளுக்கு
நிதி ஒதுக்கீடு இல்லை
திருத்தணி நகராட்சியில் சாலை பணிகளுக்கு, ஆளுங்கட்சி எம்.எல்.ஏ., அரக்கோணம் எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்யவில்லை. மாறாக, பேருந்து நிழற்குடை, ரேஷன் கடை மற்றும் கழிப்பறை போன்ற கட்டட பணிகளுக்கு மட்டுமே நிதி ஒதுக்கீடு செய்துள்ளனர். சாலை பணிகளுக்கு நிதி ஒதுக்க ஆர்வம் காட்டவில்லை.