/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள்: அணு விஞ்ஞானி பெருமிதம்
/
ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள்: அணு விஞ்ஞானி பெருமிதம்
ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள்: அணு விஞ்ஞானி பெருமிதம்
ஆசிரியர்கள்தான் நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியமானவர்கள்: அணு விஞ்ஞானி பெருமிதம்
ADDED : ஜன 21, 2025 12:09 AM

பொன்னேரி, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவை மற்றும் பொன்னேரி உலக நாத நாராயணசாமி அரசு கலைக்கல்லுாரி சார்பில், பள்ளி அறிவியல் ஆசிரியர்களுக்கான, ஐந்து நாள் பணிக்கால பயிற்சி வகுப்புகள் நேற்று துவங்கின.
அரசு கல்லுாரி முதல்வர் முனைவர் தில்லைநாயகி தலைமையில் நடந்த இந்த பயிற்சி வகுப்பில், இந்தியாவின் அணு விஞ்ஞானி முனைவர் டேனியல் செல்லப்பா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, ஆசிரியர்களுக்கு பல்வேறு ஆலோசனைகள் மற்றும் வழிகாட்டுதல்களையும், தற்போது உலக அளவில் நடைபெற்று வரும் அறிவியல் வளர்ச்சிகள் குறித்து விரிவாக பேசினார்.
பின், அவர், செய்தியாளர்களிடம் பேசியதாவது:
ஆசிரியர்கள்தான் நாட்டின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் வளர்ச்சிக்கும், புதிய மாறுதல்களுக்கும் துணை நிற்பவர்கள். பல்வேறு துறை வல்லுனர்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கின்றனர். இதில், 1-8 ம் வகுப்பு ஆசிரியர்களின் பணி மிகவும் முக்கியமானதாகும்.
அறிவியல் அறிவை கூர்மையாக்குவதற்குதான் இதுபோன்ற பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதில், கல்லுாரி பேராசிரியர்கள், விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள் பங்கேற்கின்றனர். இதன் வாயிலாக உலக அளவில் என்ன நடைபெற்று கொண்டிருக்கிறது என்பதை தெரிந்து கொள்வதற்கு வாய்ப்பாகும்.
எந்த மாதிரியான பொருட்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதை ஏன், நம் நாட்டில் உற்பத்தி செய்ய முடியாது. அதற்கான தேடல்தான் இந்த பயிற்சி வகுப்பின் நோக்கம்.
மாணவர்களுக்கு கல்விஅறிவுடன், தனித்திறமைகளும் வளர்க்க வேண்டும். அப்போதுதான் நம்நாட்டில், வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை உள்நாட்டில் உற்பத்தி செய்வதற்கான சாத்திய கூறுகள் உண்டாகும்.
ஆசிரியர்களின் அறிவியல் அறிவுத்திறனை மெருகேற்றுவதற்கே இந்த பயிற்சி முகாம். ஆசிரியர்களின் கற்றுவித்தலில்தான் பல்வேறு வல்லுனர்கள் உருவாக்கப்படுகின்றனர்.
அவர்களுக்கு, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப பேரவை, பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.
இவ்வாறு அவர்பேசினார்.