/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கிராமப்புற பள்ளிகளின் பாதுகாப்பு கருதி 'சிசிடிவி' நிறுவ ஆசிரியர்கள் கோரிக்கை
/
கிராமப்புற பள்ளிகளின் பாதுகாப்பு கருதி 'சிசிடிவி' நிறுவ ஆசிரியர்கள் கோரிக்கை
கிராமப்புற பள்ளிகளின் பாதுகாப்பு கருதி 'சிசிடிவி' நிறுவ ஆசிரியர்கள் கோரிக்கை
கிராமப்புற பள்ளிகளின் பாதுகாப்பு கருதி 'சிசிடிவி' நிறுவ ஆசிரியர்கள் கோரிக்கை
ADDED : செப் 30, 2025 12:39 AM
திருவாலங்காடு;கிராமப்புறத்தில் உள்ள அரசு பள்ளிகளின் பாதுகாப்பு கருதி, 'சிசிடிவி' கேமரா பொருத்த, அரசு நிதி ஒதுக்க வேண்டுமென, திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டத்தில், திருவள்ளூர், பொன்னேரி என, இரு கல்வி மாவட்டங்கள் உள்ளன. இந்த கல்வி மாவட்டங்களில், 944 துவக்கப் பள்ளிகள், 265 நடுநிலைப் பள்ளிகள், 145, உயர்நிலைப் பள்ளிகள், 118, மேல்நிலைப் பள்ளிகள், என 1,472 அரசு பள்ளிகள் உள்ளன.
இவற்றில் ஒரு சில அரசு பள்ளிகளில் மட்டுமே, தனியார் பங்களிப்புடன், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
கிராமப்புறங்கள் மட்டுமின்றி, நகர்புறங்களில் இயங்கும் பெரும்பாலான அரசு பள்ளிகளில், 'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
இதனால், விடுமுறை நாட்களில் வெளிநபர்கள் அத்துமீறி நுழைந்து, விதிமுறைகளை மீறி விளையாட்டு மைதானத்தை உபயோகிப்பது, வகுப்பறை, வளாகத்திற்குள் மதுபாட்டில்களை உடைத்து வீசுவது, கழிப்பறைகளை சேதப்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
'சிசிடிவி' கேமராக்கள் பொருத்தப்பட்டால், வெளிநபர்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த முடியும். இதற்கு, பள்ளிகளின் பராமரிப்பு நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என, அதிகாரிகள் அறிவுறுத்தினாலும், அது சாத்தியமில்லை என்கின்றனர் ஆசிரியர்கள்.
இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:
பள்ளி பராமரிப்புக்காக வழங்கப்படும் நிதி, துாய்மைப் பொருட்கள் வாங்கவும், சிறிய பராமரிப்பு பணிகளுக்கு மட்டுமே பயன்படுத்த முடியும்.
'சிசிடிவி' கேமரா போன்ற அதிக விலை கொண்ட உபகரணங்களை, இந்த நிதியில் இருந்து வாங்க முடியாது.
ஒப்பந்த அடிப்படையில் வாட்ச்மேன்கள், துாய்மைப் பணியாளர்களுக்கு, நிலையான சம்பளம் போன்றவையும் அவசியம். சில பள்ளிகளில் ஆசிரியர்களே, தங்கள் சொந்தப் பணத்தில் பணியாளர்களை நியமித்து, துாய்மைப் பணிகளை மேற்கொள்கின்றனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.