/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் பயணம் 'மொபைல் ஆப்' தயாரிக்க 'டெண்டர்'
/
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் பயணம் 'மொபைல் ஆப்' தயாரிக்க 'டெண்டர்'
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் பயணம் 'மொபைல் ஆப்' தயாரிக்க 'டெண்டர்'
ஒரே டிக்கெட்டில் பஸ், ரயில் பயணம் 'மொபைல் ஆப்' தயாரிக்க 'டெண்டர்'
ADDED : மார் 04, 2024 06:43 AM
சென்னை: சென்னையில் பேருந்து, மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவற்றில் பயணிப்பதற்கான மொபைல் போன் செயலி தயாரிப்பதற்கு, போக்குவரத்து குழுமமான 'கும்டா' மீண்டும் 'டெண்டர்' கோரியுள்ளது.
போக்குவரத்து திட்டங்களை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து குழுமமான கும்டா, 2010ல் துவங்கப்பட்டது. பல ஆண்டுகளாக முடங்கி இருந்த இந்த அமைப்பு, செயல்படத் துவங்கியுள்ளது.
சென்னையில் தற்போது மாநகர பேருந்து, புறநகர் மின்சார ரயில், மெட்ரோ ரயில் ஆகியவை பிரதான பொது போக்குவரத்து வசதிகளாக உள்ளன.
இதில், தனித்தனியான கட்டண விகிதங்கள், தனித்தனி டிக்கெட் முறை அமலில் உள்ளன. சென்னையில் ஓரிடத்தில் இருந்து பயணிப்பவர், இந்த மூன்று வசதிகளையும் அடுத்தடுத்து பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. அப்போது, தனித்தனி கட்டணம், டிக்கெட் முறை தேவையில்லாத பல்வேறு சிரமங்களை ஏற்படுத்துகிறது.
இதற்கு தீர்வாக, அனைத்து பொது போக்குவரத்து சேவைகளிலும், ஒரே டிக்கெட்டில் பயணிப்பதற்கான திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நிலையில், ஒருமித்த கருத்து எழுந்துள்ளது.
இதன் அடிப்படையில், இத்திட்டத்தை செயல்படுத்த, தமிழக அரசு, கும்டாவுக்கு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, மொபைல் போன் செயலி உருவாக்க திட்டமிடப்பட்டது.
இதற்கான தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்தும் நிறுவனத்தை தேர்வு செய்ய, சில மாதங்களுக்கு முன் கும்டா சார்பில் 'டெண்டர்' கோரப்பட்டது.
அதில் பங்கேற்ற நிறுவனங்கள் குறித்து திருப்தி ஏற்படாத நிலையில், தற்போது மீண்டும் புதிதாக டெண்டர் கோரப்பட்டுள்ளது. சென்னை பெருநகர் பகுதி முழுமைக்கும் செயல்படுத்தும் வகையில், புதிய மொபைல் போன் ஆப் ஏற்படுத்துவதற்கான கட்டமைப்புகள் உருவாக்கப்படும்.
இதனால், பொதுமக்கள் அனைத்து பொது போக்குவரத்து வசதிகளையும் எளிதாக பயன்படுத்தும் நிலை ஏற்படும் என, கும்டா அதிகாரிகள் தெரிவித்தனர்.

