/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
ஆந்திராவில் இருந்து 20,000 ஆடுகள் வருகை; விளைநிலத்தில் 'கிடை' போடும் பணி தீவிரம்
/
ஆந்திராவில் இருந்து 20,000 ஆடுகள் வருகை; விளைநிலத்தில் 'கிடை' போடும் பணி தீவிரம்
ஆந்திராவில் இருந்து 20,000 ஆடுகள் வருகை; விளைநிலத்தில் 'கிடை' போடும் பணி தீவிரம்
ஆந்திராவில் இருந்து 20,000 ஆடுகள் வருகை; விளைநிலத்தில் 'கிடை' போடும் பணி தீவிரம்
ADDED : பிப் 11, 2024 11:21 PM

பொன்னேரி : பொன்னேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில், ஒவ்வொரு ஆண்டும், சம்பா பருவ நெல் அறுவடைக்கு பின், விளைநிலங்களை தரிசாக போட்டு, அதில் ஆடு, மாடுகளின் எருவை கொட்டி மண்ணை பதப்படுத்துவர்.
தற்போது வீடுகளில் ஆடு, மாடுகளை வளர்ப்பவர்கள் குறைந்து வருவதால், இயற்கை உரமான எருவிற்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது.
இதற்காக விளைநிலங்களில், ஆடுகளை அடைத்து 'கிடை' போடும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு உள்ளனர்.
'கிடை' போடுவது என்பது, ஒரு ஏக்கர் நிலத்தில், 1,000 ஆடுகளை ஒருநாள் இரவு முழுதும் அடைத்து வைப்பர். ஆடுகள் வெளியே செல்லாத வகையில் அதன் உரிமையாளர்கள் சுற்றிலும் தட்டி அமைத்து காவல் காப்பர்.
ஆடுகளின் சிறுநீர், சாணம் நேரிடையாக நிலத்தில் விழும்போது அது நல்ல இயற்கை உரமாக அமைகிறது. ஒருநாள் முழுதும், ஒரு ஏக்கர் நிலத்திற்கு, 1,000 ஆடுகள் கிடைபோட 1,000 ரூபாய் வரை பணமும், 10 கிலோ அரிசியும் ஆடு வளர்ப்பவர்கள் விவசாயிகளிடம் இருந்து பெறுகின்றனர்.
இதற்கென ஆந்திர மாநிலம், சித்துார், புத்துார் ஆகிய பகுதிகளில் செம்மறி ஆடுகள் வளர்க்கப்படுகின்றன.
அவை பொன்னேரி பகுதிக்கு கொண்டு வரப்பட்டு, கிடை போடும் பணிகள் நடைபெறுகிறது.
தற்போது கிடை போடுவதற்காக ஆந்திராவில் இருந்து, 20,000 ஆடுகள் லாரிகளில் கொண்டு வரப்பட்டு, விவசாய நிலங்களில் கிடை போடப்பட்டு உள்ளது.
பகல் முழுதும் மேய்ச்சலில் இருக்கும் ஆடுகள், இரவில் விவசாயிகள் தெரிவிக்கும் நிலங்களில் கிடை போடப்படுகின்றன. அடுத்த இரண்டு மாதங்களுக்கு பொன்னேரி மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் கிடை போட்டுவிட்டு, அதன் பின், ஆடுகளை மேய்த்தபடியே சொந்த ஊருக்கு சென்று விடுவோம் என, ஆடு வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர்.