/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
சரிந்து பலவீனமடையும் ஆரணி ஆற்றின் கரை...கவலை:விளைநிலம் மூழ்குவதால் பயிர் செய்வதில் சிக்கல்
/
சரிந்து பலவீனமடையும் ஆரணி ஆற்றின் கரை...கவலை:விளைநிலம் மூழ்குவதால் பயிர் செய்வதில் சிக்கல்
சரிந்து பலவீனமடையும் ஆரணி ஆற்றின் கரை...கவலை:விளைநிலம் மூழ்குவதால் பயிர் செய்வதில் சிக்கல்
சரிந்து பலவீனமடையும் ஆரணி ஆற்றின் கரை...கவலை:விளைநிலம் மூழ்குவதால் பயிர் செய்வதில் சிக்கல்
ADDED : ஏப் 17, 2025 09:34 PM

ஊத்துக்கோட்டை:ஊத்துக்கோட்டை அருகே ஆரணி ஆற்றின் கரை பலவீனமடைந்து கற்கள் பெயர்ந்து வருவதால், விளைநிலைங்கள் ஆற்றில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.
ஆந்திராவில் உருவாகும் ஆரணி ஆறு, நகரி, பிச்சாட்டூர், நாகலாபுரம் வழியே, 65.20 கி.மீட்டர் பயணித்து, தமிழக எல்லையான ஊத்துக்கோட்டையை அடைகிறது.
அங்கிருந்து சிட்ரபாக்கம், பனப்பாக்கம், செங்காத்தாகுளம், பெரியபாளையம், பாலேஸ்வரம், ஆரணி, ஏ.என்.குப்பம், லட்சுமிபுரம் வழியே, 66.40 கி.மீட்டர் துாரம் பாய்ந்து, புலிக்காட் எனும் இடத்தில் கடலில் கலக்கிறது.
ஆரணி ஆறு பாயும் இடங்களில், ஐந்து தடுப்பணைகள், மூன்று அணைக்கட்டுகள் கட்டி தண்ணீர் தேக்கி வைக்கப்படுகிறது.
இவ்வாறு தேக்கி வைக்கப்படும் நீரால், சுற்றியுள்ள 5 கி.மீட்டர் துாரத்திற்கு நிலத்தடி நீர் உயர்ந்து, குடிநீர் மற்றும் விவசாயத்திற்கு தண்ணீர் பற்றாக்குறை இல்லாத நிலை உருவாகும்.
தமிழக பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் கரைகள் பலவீனமாக உள்ளன. உதாரணத்திற்கு, ஊத்துக்கோட்டை அடுத்த, சிட்ரபாக்கம் அணைக்கட்டு உள்ள பகுதியையொட்டி, கரைகள் பலப்படுத்த வெள்ளை கற்கள் பதிக்கப்பட்டன.
தற்போது, அவை ஒவ்வொன்றாக சரிந்து விழுந்துள்ளது. இதனால், வெள்ளப்பெருக்கு காலங்களில் கரைகளை கொஞ்சம், கொஞ்சமாக தண்ணீர் அரித்து, விளைநிலங்களை கபளீகரம் செய்கிறது.
இதுகுறித்து அப்பகுதிவாசிகள், நீர்வள ஆதாரத் துறை, கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்தும், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதன் காரணமாக, விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
இதுகுறித்து, மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிட்ரபாக்கம் அணைக்கட்டு பகுதியில் உள்ள ஆரணி ஆற்றின் கரை கரைந்து வருவதால், விளைநிலங்கள் ஆற்றில் மூழ்கும் அபாயம் உள்ளது. இதனால், நாங்கள் பயிர் செய்யாமல் உள்ளோம். இப்பகுதியை சேர்ந்த, 15 பேர் ஒன்றாக இணைந்து, 15 நாட்களுக்கு முன், மக்கள் குறைதீர்க்கும் முகாமில் கலெக்டரிடம் மனு அளித்தோம். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- விவசாயிகள்,
சிட்ரபாக்கம்,
ஊத்துக்கோட்டை.