/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
பயணியர் நிழற்குடை முன் கால்வாய் உடைந்து பள்ளம்
/
பயணியர் நிழற்குடை முன் கால்வாய் உடைந்து பள்ளம்
ADDED : மார் 20, 2025 02:29 AM

ஈக்காடு:திருவள்ளூர் செங்குன்றம் சாலையில் ஈக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட சொசைட்டி நகர் அமைந்துள்ளது. புதிதாக உருவாகி வரும் இந்த நகரில், 300க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டப்பட்டுள்ளன. மேலும், புதிய குடியிருப்புகளும் அங்கு உருவாகி வருகின்றன. திருவள்ளூர் நகருக்கு அருகில் அமைந்திருப்பதால், இப்பகுதி அசுர வளர்ச்சியடைந்து வருகிறது.
சொசைட்டி நகர் பகுதிவாசிகள், அரசு அலுவலகங்கள், கல்வி, பணி நிமித்தமாக திருவள்ளூருக்கு வந்து செல்கின்றனர். பெரும்பாலானோர் செங்குன்றம் - திருவள்ளூர் வழியாக செல்லும் பேருந்துகளை பயன்படுத்தி பயணம் செய்கின்றனர்.
பயணியர் வசதிக்காக, சொசைட்டி நகர் அங்கன்வாடி அருகே நிழற்குடை, 2021ம் ஆண்டு 5 லட்சம் ரூபாய் மதிப்பில் அமைக்கப்பட்டது. ஆனால், பயணியருக்கு உதவாத வகையில் நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. மேலும், பேருந்தும் நிழற்குடையில் நிற்பதில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
அங்குள்ள பயணியர் இருக்கை மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்லும் சாய்தளம் மற்றும் கைப்பிடி துருப்பிடித்து வீணாகி வருகிறது. இதனால், அரசு பணம் விரயமாகியுள்ளதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், பேருந்து நிழற்குடை முன் கட்டப்பட்டுள்ள மழைநீர் கால்வாய் உடைந்து, பெரிய பள்ளம் உள்ளது. இதன் காரணமாகவும் பேருந்து நிறுத்தத்திற்கு செல்வதை பயணியர் தவிர்த்து வருகின்றனர்.
எனவே, திருவள்ளூர் ஒன்றிய நிர்வாகம் பயணியர் நிழற்குடையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டுவரவும், உடைந்த மழைநீர் கால்வாயை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.