/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
குளமாக மாறிய இணைப்பு சாலை அரசு மருத்துவமனை நுழைவாயில்
/
குளமாக மாறிய இணைப்பு சாலை அரசு மருத்துவமனை நுழைவாயில்
குளமாக மாறிய இணைப்பு சாலை அரசு மருத்துவமனை நுழைவாயில்
குளமாக மாறிய இணைப்பு சாலை அரசு மருத்துவமனை நுழைவாயில்
ADDED : டிச 28, 2024 01:50 AM

திருமழிசை:சென்னை- பெங்களூர் அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையினை 6 வழி சாலையாக விரிவாக்கும் பணி, 2018 இறுதியில் தொடங்கப்பட்டது. மாநில நெடுஞ்சாலைத்துறையால் மேற்கொள்ளப்பட்ட மதுரவாயல் முதல் ஸ்ரீபெரும்புதுார் வரையிலான 23 கி.மீட்டர் நீள சாலை விரிவாக்கப் பணிகள் நிறைவடையும் கட்டத்திற்கு வந்து விட்டது.
இந்த அதிவிரைவு தேசிய நெடுஞ்சாலையின் இருபுறமும் 20க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் செல்லும் வகையில் இருவழிப்பாதை இணைப்பு சாலை அமைக்கப்பட்டுள்ளது.
இந்த இணைப்புச்சாலை கடந்த சில தினங்களாக பெய்த மழையில் மழைநீர் தேங்கி குளம்போல் மாறியுள்ளது. குறிப்பாக செம்பரம்பாக்கம் செல்லும் சாலை பகுதியில் குளம்போல் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால் இந்த இணைப்புச் சாலை வழியே செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் செம்பரம்பாக்கம் கிராமத்திற்கு செல்லும் பகுதிவாசிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, சம்பந்தப்பட்ட இணைப்பு சாலை பகுதியில் ஆய்வு செய்து மழைநீர் வெளியேறும் வகையில் சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் மற்றும் செம்பரம்பாக்கம் பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
* ஆர்.கே.பேட்டை அடுத்த விளக்கணாம்பூடி புதுார் கிராமத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்பட்டு வருகிறது.
விளக்கணாம்பூடி புதுார் திரவுபதியம்மன் கோவிலுக்கு தெற்கில் அமைந்துள்ள மருத்துவமனைக்கு கான்கிரீட் சாலை போடப்பட்டுள்ளது.
இந்த சாலை, மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் மட்டும் தாழ்வாக அமைந்துள்ளது. இதனால், மழைக்காலத்தில் இந்த பகுதியில் மழைநீர் வடிந்து செல்ல வழியின்றி, மாதக்கணக்கில் நுழைவாயில் எதிரே குளம் போல் தேங்கி நிற்பது வழக்கம்.
தற்போது பெய்துவரும் தொடர் மழையால் கடந்த இரண்டு மாதங்களாக, மருத்துவமனை எதிரே 50 மீட்டர் துாரத்திற்கு கான்கிரீட் சாலையில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், மருத்துவமனைக்கு வரும் பகுதிவாசிகள் இந்த மழைநீரில் இறங்கி நடந்து தான் மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய நிலை உள்ளது. ஏற்கனவே உடல்நல பாதிப்பால் மருத்துவமனைக்கு வருபவர்கள், இந்த மழைநீரில் நடந்து, மருத்துவமனைக்கு செல்ல அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த கான்கிரீட் சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

