/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கும்மிடி மீன் மார்க்கெட் கட்டடம் படுமோசம் வாடகை வசூலிப்பில் மட்டும் பேரூராட்சி நிர்வாகம் ஆர்வம்
/
கும்மிடி மீன் மார்க்கெட் கட்டடம் படுமோசம் வாடகை வசூலிப்பில் மட்டும் பேரூராட்சி நிர்வாகம் ஆர்வம்
கும்மிடி மீன் மார்க்கெட் கட்டடம் படுமோசம் வாடகை வசூலிப்பில் மட்டும் பேரூராட்சி நிர்வாகம் ஆர்வம்
கும்மிடி மீன் மார்க்கெட் கட்டடம் படுமோசம் வாடகை வசூலிப்பில் மட்டும் பேரூராட்சி நிர்வாகம் ஆர்வம்
ADDED : ஜூன் 17, 2025 09:30 PM
கும்மிடிப்பூண்டி:கும்மிடிப்பூண்டியில் உள்ள மீன் மார்க்கெட் கட்டடம், எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடிய அபாய நிலையில் இருப்பதால் பொதுமக்களும், வியாபாரிகளும் அச்சத்தில் உள்ளனர்.
கும்மிடிப்பூண்டி ஜி.என்.டி., சாலையில், கடந்த 1989ம் ஆண்டு, நாள் அங்காடி கட்டடம் நிறுவப்பட்டது.
பேரூராட்சியின் பராமரிப்பில் உள்ள இக்கட்டடத்தில் ஆடு, கோழி, மீன், இறைச்சி கடைகள், மளிகை கடைகள் என, 25 கடைகள் இயங்கி வருகின்றன. அங்காடியின் பின்புறம் ஆடு அடிக்கும் தொட்டிக்கான தனி கட்டடம் உள்ளது.
நாள் அங்காடி கட்டடத்தில், அதிகளவில் மீன் கடைகள் இருப்பதால், மீன் மார்க்கெட் கட்டடம் என அனைவராலும் அழைக்கப்படுகிறது. 10 ஆண்டுகளுக்கு முன்பே கட்டடத்தின் துாண்கள், சுவர்கள், தளம் ஆகியவற்றில் விரிசல் ஏற்பட்டது.
அதன்பின், அடிக்கடி சிமென்ட் காரைகள் பெயர்ந்து, மீன் வியாபாரிகள், பொதுமக்கள் மீது விழுந்து காயமடைவது வாடிக்கையாக இருந்து வந்தது.
தற்போது, கட்டடத்தின் கான்கிரீட் பூச்சுகள் உதிர்ந்து, கம்பிகள் அனைத்தும் தெரியும் அளவிற்கு ஆபத்தான சூழலில் இயங்கி வருகிறது. எந்த நேரத்திலும் இடிந்து விழக்கூடும் என்ற அச்சத்தில் வியாபாரிகளும், பொதுமக்களும் உள்ளனர்.
கட்டடத்தின் மோசமான நிலையை உணர்ந்து, முதல் தளத்தில் இயங்கி வந்த கும்மிடிப்பூண்டி தபால் நிலையம், மூன்று ஆண்டுகளுக்கு முன் வாடகை கட்டடத்திற்கு இடம் மாற்றப்பட்டது.
எனவே, அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கும்மிடிப்பூண்டி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
பயன்படுத்த தகுதியற்ற மீன் மார்க்கெட் கட்டடத்தில் உள்ள அனைத்து கடைகளிடமும், கும்மிடிப்பூண்டி பேரூராட்சி நிர்வாகம் வாடகை வசூலித்து வருவது வேதனை அளிக்கிறது. இந்த கட்டடத்தை இடித்துவிட்டு, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஐந்து ஆண்டுகளாக வியாபாரிகளும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால், தற்போது வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
- வியாபாரிகள், கும்மிடிப்பூண்டி.