/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் சம்பிரதாயமாக நடந்ததால் 'வெறிச்'
/
உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் சம்பிரதாயமாக நடந்ததால் 'வெறிச்'
உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் சம்பிரதாயமாக நடந்ததால் 'வெறிச்'
உள்ளாட்சி தின கிராம சபை கூட்டம் சம்பிரதாயமாக நடந்ததால் 'வெறிச்'
ADDED : நவ 02, 2025 02:02 AM

உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு நேற்று நடந்த கிராமசபையில், போதிய விழிப்புணர்வு இல்லாததால், பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் வராமல், வெறிச்சோடி காணப்பட்டது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள, 526 ஊராட்சிகளில் நேற்று, உள்ளாட்சி தினத்தை முன்னிட்டு, கிராம சபை கூட்டம் நடத்த கலெக்டர் உத்தரவிட்டார்.
திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில், மக்களுக்கு கூட்டம் நடப்பது குறித்து, எவ்வித தகவலும் அளிக்கப்படவில்லை. இதனால், பெரும்பாலான ஊராட்சிகளில் மக்கள் பங்கேற்பின்றி, சம்பிரதாயமாக கூட்டத்தை நடத்தினர்.
திருவாலங்காடு திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் பங்கேற்கவில்லை.
மக்கள் நலப்பணியாளர் வாயிலாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு கிராம சபை முடிந்ததாக, மக்கள் புகார் தெரிவித்தனர்.
அதிகாரிகள் யாரும் பங்கேற்காததால் புகார் அளிக்க வந்தவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
தேர்தல் புறக்கணிப்பு காட்டுப்பள்ளி - மாமல்லபுரம் சென்னை எல்லை சாலைத்திட்ட பணிக்கு, சோழவரம் ஒன்றியம் அத்திப்பேடு ஊராட்சியில், உயர்மட்ட மேம்பாலம் அமைக்க, ஊராட்சி அலுவலகம், அங்கன்வாடி மையம், கிராம சேவை மையம் உள்ளிட்ட ஐந்து அரசு கட்டடம் அகற்றப்பட்டன.
அதே பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலத்தை மீட்டு, இடிக்கப்பட்ட அரசு கட்டடங்களுக்குமாற்றாக புதிதாக அமைக்க கிராமவாசிகள் வலியுறுத்தி வந்தனர்.
அதை தொடர்ந்து, கடந்த செப். 25ல், தனியார் ஆக்கிரமிப்பில் உள்ள அரசு நிலங்களை மீட்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆக்கிரமிப்பு பணிகள் முழுமையாக நடைபெறாமல் அரைகுறையாக விடப்பட்டது.
மேலும், புதிய அரசு கட்டடங்களை கட்டுவதற்கான எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.
இதனால் அதிருப்தியடைந்த மக்கள், நேற்று அத்திப்பேடில் நடந்த கிராம சபை கூட்டத்தில், வரும் சட்டசபை தேர்தலை புறக்கணிப்போம் என தீர்மானம் நிறைவேற்றினர்.
ஊத்துக்கோட்டை பூண்டி ஒன்றியம், பேரிட்டிவாக்கத்தில் நடந்த கூட்டத்தில், உப்பரபாளையத்தில் கட்டி முடித்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர தீர்மானம் நிறைவேறப்பட்டது. நந்திமங்களத்தில், 100 நாள் வேலை வாய்ப்பை அதிக நாட்களுக்கு தர வேணடும் என வலியுறுத்தினர்.
மாம்பாக்கத்தில், புதுவாழ்வு திட்டத்தில், 20 விதவைகளுக்கு தலா, 20 ஆயிரம் ரூபாய் சுய தொழிலுக்கு வழங்கப்படும் என செயலர் யோகானந்தன் தெரிவித்தார்.
போந்தவாக்கத்தில் விளையாட்டு மைதானத்தில் ஆக்கிரமிப்பை அகற்ற சீரமைக்க வேண்டும் என மக்கள் வலியுறுத்தினர்.
ஆர்வமில்லை திருத்தணி ஒன்றியம் முருக்கம்பட்டு ஊராட்சியில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்-சத்துணவு சாமுண்டீஸ்வரி தலைமையில் நடந்த கூட்டத்தில், 10 பேர் மட்டுமே பங்கேற்றனர்.
இதனால் கடமைக்காக ஒரு சில தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சூர்யநகரம் ஊராட்சியில் நடந்த கிராம சபை கூட்டத்திலும், 20 பேர் மட்டுமே கலந்து கொண்டனர்.
ஆர்.கே.பேட்டை ஆர்.கே.பேட்டை, பள்ளிப்பட்டு ஒன்றியங்களில் நடந்த கிராம சபை கூட்டத்தில், வரவு செலவு அறிக்கை வாசிக்கப்பட்டது.
திருமலைராஜிபேட்டையில், மழைநீர் போக்கு கால்வாய் சீரமைக்க வேண்டும் என தீர்மானம் நிறை வேற்றினர்.
- நமது நிருபர் குழு -

