/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
வீட்டு வாடகை கேட்ட மூதாட்டியை கடித்து 'குக்கரால்' தாக்கியவருக்கு சிறை
/
வீட்டு வாடகை கேட்ட மூதாட்டியை கடித்து 'குக்கரால்' தாக்கியவருக்கு சிறை
வீட்டு வாடகை கேட்ட மூதாட்டியை கடித்து 'குக்கரால்' தாக்கியவருக்கு சிறை
வீட்டு வாடகை கேட்ட மூதாட்டியை கடித்து 'குக்கரால்' தாக்கியவருக்கு சிறை
ADDED : செப் 23, 2024 12:34 AM
சென்னை: திருவான்மியூர், மங்களேரி பகுதியைச் சேர்ந்தவர் கமலாபாய், 68. இவரது, வீட்டின் ஒரு பகுதியில், ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த திலகராஜ், 37, என்பவர் வாடகைக்கு வசித்து வந்துள்ளார்.
ஓராண்டாக வசித்து வரும் திலகராஜ், வீட்டின் வாடகையை சரியாக கொடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, 2022 ஆக., 31ல், திலகராஜிடம் வாடகை சரியாக கொடுக்க முடியவில்லை என்றால், வீட்டை காலி செய்யும்படி கமலாபாய் கூறியுள்ளார்.
இதில் ஆத்திரமடைந்த திலகராஜ், வீட்டினுள் நுழைந்து கமலாபாயை தாக்கியுள்ளார். மேலும், முகம், கை, கழுத்து ஆகிய இடங்களில் கடித்த திலகராஜ், 'குக்கர்' மூடியால் கமலாபாயின் மண்டையை உடைத்துள்ளார்.
படுகாயம் அடைந்த கமலாபாய், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார். இச்சம்பவம் குறித்து, கமலாபாய் மகள் மணிமேகலை அளித்த புகாரின்படி, திருவான்மியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, திலகராஜை கைது செய்து, சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி ஜெ.ஸ்ரீதேவி முன் நடந்தது.
அரசு சிறப்பு வழக்கறிஞர் ஆரத்தி பாஸ்கரன் ஆஜரானார்.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு: திலகராஜ் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டு உள்ளன. எனவே, அவருக்கு கொடுங்காயம் மற்றும் வீட்டினுள் அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு, தலா ஐந்து ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக 2,000 ரூபாயும் விதிக்கப்படுகிறது.
இந்த தண்டனையை, ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும். அபராத தொகையை பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வழங்க வேண்டும். மேலும், கூடுதல் இழப்பீடு வழங்குவது தொடர்பாக, சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.