/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
'விடிஞ்சா கல்யாணம்' மணமகள் மர்ம மரணம்
/
'விடிஞ்சா கல்யாணம்' மணமகள் மர்ம மரணம்
ADDED : அக் 31, 2025 12:30 AM

பள்ளிப்பட்டு:இன்று காலை திருமணம் நடக்க விருந்த மணமகள் குளியறையில் மர்மமான முறையில் இறந்து சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பள்ளிப்பட்டு அடுத்த அத்திமாஞ்சேரி பேட்டை கிராமத்தைச் சேர்ந்த ராமு - லட்சுமி. தம்பதி மகன் மணி, 27. பொறியியல் பட்டதாரி.
இவருக்கும், ஆந்திர மாநிலம் நகரி அடுத்த சிந்தலப்பட்டடை கிராமத்தைச் சேர்ந்த பாண்டுரங்கன்- வனிதா தம்பதி மகள் சந்தியா, 23, என்பவருக்கும் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.
நேற்று மாலை அத்திமாஞ்சேரிபேட்டை அருகே உள்ள திருமலை தேவஸ்தான திருமண மண்டபத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சியும், இன்று காலை, 6:00 - 7:30 மணியளவில் திருமணமும் நடக்க விருந்தது.
இரு நாட்களுக்கு முன்பே, சந்தியாவை, மணமகன் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்நிலையில் நேற்று காலையில் சந்தியா குளிப்பதற்காக குளியல் அறைக்கு சென்றார். நீண்ட நேரம் ஆகியும் சந்தியா வெளியே வராததால் சந்தேகம் அடைந்த மணமகன் வீட்டார் மற்றும் உறவினர்கள் குளியல் அறையின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, சந்தியா மயங்கிய நிலையில் விழுந்து கிடந்தார்.  உறவினர்கள் அவரை மீட்டு அத்திமாஞ்சேரிபேட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், சந்தியா இறந்துவிட்டதாக தெரிவித்தார். பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இன்று நடக்க விருந்த திருமணம் நின்றதால் மணமகன், மணமகள் வீட்டார் மற்றும் உறவினர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.
இது குறித்து பொதட்டூர்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனைக்கு பின் தான் மணமகள் சந்தியா எதற்காக இறந்தார் என தெரிய வரும்.

