/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாணவர்களை சுற்ற விட்ட அதிகாரிகள்
/
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாணவர்களை சுற்ற விட்ட அதிகாரிகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாணவர்களை சுற்ற விட்ட அதிகாரிகள்
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாணவர்களை சுற்ற விட்ட அதிகாரிகள்
ADDED : ஆக 14, 2025 11:27 PM

திருவாலங்காடு:'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நேற்று சின்னம்மாபேட்டையில் நடந்தது. இதில் வீட்டிற்கு மின் இணைப்பு கேட்டு மனுவுடன் வந்த மாணவர்களை அதிகாரிகள் சுற்றலில் விட்டதால் மனு கொடுக்காமலே திரும்பி சென்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் சின்னம்மாபேட்டை ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடந்தது.
முகாமில், வருவாய் துறை, மின்சார துறை, ஊரக வளர்ச்சி துறை உட்பட, 15 துறைகள் கீழ் 46 சேவைகளை மக்கள் பெறமுடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
சின்னம்மாபேட்டை காலனி மாரியம்மன் கோவில் தெருவில் வசிக்கும் வேலாயுதம் மகள் பிரியதர்ஷினி, 16 என்பவர் தன் சகோதரர் தினேஷ், 14 உடன் மனு அளிக்க வந்தார்.
அவர்கள் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
நாங்கள் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓட்டு வீட்டில் வசித்து வருகிறோம். திருவாலங்காடு அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு படித்து வருகிறோம்.
வீட்டில் மின் இணைப்பு இல்லாததால், இரவில் படிக்க முடியாத சூழல் உள்ளது. விஷ ஜந்துக்கள் நடமாட்டத்தால், இரவில் துாங்க முடியவில்லை. தங்கள் வீட்டிற்கு மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவை மின்துறை அதிகாரிகளிடம் வழங்கியபோது, அவர் இது அரசு புறம்போக்கு நிலம், எனவே வருவாய் துறையிடம் என்.ஓ.சி., வாங்கி வரும்படி அறிவுறுத்தினார்.
வருவாய் துறை அதிகாரி, ஊராட்சி அலுவலகத்தில் வீட்டு வரி ரசீது வாங்கி மனுவுடன் இணைக்க வேண்டும் என கூறியுள்ளார்.
ஊராட்சி அதிகாரியிடம் கேட்டால், ஆட்சேபனை அற்ற புறம்போக்கு நிலம் என, வி.ஏ.ஓ., விடம் சான்று வாங்கி இணைக்க வேண்டுமென மீண்டும் வருவாய் துறையை கையை காட்டி உள்ளார். இப்படி மூன்று துறை அதிகாரிகளும் மாறி, மாறி மாணவர்களை சுற்ற விட்டதால், நொந்து போன மாணவர்கள் மனுவை அளிக்காமல் விரக்தியுடன் திரும்பி சென்றனர்.
இதுகுறித்து மாணவரின் உறவினர் ஒருவர் கூறியதாவது:
மாணவர்கள் பள்ளியில் விடுமுறை கேட்டு, தங்களுக்கு தீர்வு கிடைக்கும் என, நம்பி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மனு கொடுக்க வந்தால், அதிகாரிகளின் அலட்சிய போக்கால் மாணவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். மாணவர்களின் கல்வி பாதிக்காத வகையில் விரைந்து மின் இணைப்பு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.