/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கான பணி ஆணை ரத்து...அதிரடி!வேலை துவங்காததால் மறுடெண்டர் கோரியது நகராட்சி
/
கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கான பணி ஆணை ரத்து...அதிரடி!வேலை துவங்காததால் மறுடெண்டர் கோரியது நகராட்சி
கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கான பணி ஆணை ரத்து...அதிரடி!வேலை துவங்காததால் மறுடெண்டர் கோரியது நகராட்சி
கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்திற்கான பணி ஆணை ரத்து...அதிரடி!வேலை துவங்காததால் மறுடெண்டர் கோரியது நகராட்சி
ADDED : ஜன 19, 2025 08:42 PM

திருவள்ளூர்:திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்தை நவீனப்படுத்தும் பணியை குறிப்பிட்ட காலகெடுவிற்குள் செய்து முடிக்காததால், 10.48 கோடி மதிப்பிலான பணிக்கான ஆணை ரத்து செய்யப்பட்டுள்ளது. வரும் 24ம் தேதி, மறு ஒப்பந்தம் கோரப்பட்டு ஒப்பந்ததாரர் தேர்வு செய்யப்படுவார் என, நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருவள்ளூர் நகராட்சியில், 2013 முதல் பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டில் உள்ளது. நகரில், 86.97 கி.மீட்டருக்கு பாதாள சாக்கடை குழாய் பதிக்கப்பட்டது. வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவு நீரை சேகரிக்க, நகரின் மூன்று இடங்களில், கழிவு நீர் சேகரிப்பு மையம் அமைக்கப்பட்டு உள்ளது.
இந்த கழிவு நீர், தேவி மீனாட்சி நகரில் கழிவு நீர் சுத்திகரிப்பு மையம் அமைக்கப்பட்டு, அங்கு சுத்திகரிப்பு செய்யப்பட்ட நீர், புட்லார் ஏரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது, ஏரியில் தண்ணீர் நிரம்பி உள்ளதால், வெளியேற்றப்படும் கழிவுநீர் மீண்டும், சுத்திகரிப்பு மையத்தைச் சுற்றிலும் தேங்கி உள்ளது.
இதன் காரணமாக, தேவா நகர், தேவி மீனாட்சி நகர் மற்றும் பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவிலைச் சுற்றி உள்ள குடியிருப்பு பகுதிகளில், கழிவு நீர் குளம் போல் தேங்கி உள்ளது. மாதக்கணக்கில் தேங்கிய கழிவுநீரால், அப்பகுதிகளில் துர்நாற்றம் வீசுவதுடன், வீடுகளுக்குள் பாம்புகளும், உள்ளே நுழைந்து விடுகின்றன.
சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு உள்ளதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தில் உள்ள இயந்திரம் வேலை செய்யாததால், முறையாக சுத்திகரிக்கப்படாமல் கழிவு நீர் வெளியேறி வருகிறது. நகரில் ஆங்காங்கே கழிவு நீரில் அடைப்பு ஏற்பட்டு, சாலைகளில் குளம் போல் தேங்கி வருகிறது.
இதையடுத்து, சுத்திகரிப்பு மையத்திற்கு கொண்டு வரப்படும் கழிவு நீரை சுத்தமான குடிநீராக மாற்றி, கூவம் ஆற்றில் விடும் வகையில் நவீன திட்டம் தயாரிக்கப்பட்டது. இதற்காக, தமிழக அரசு 10.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியது.
இந்த நிதியில், கடந்த, 2023 பிப்ரவரியில் நவீன சுத்திகரிப்பு மைய திட்ட பணி துவங்கியது. இதற்காக, ஏற்கனவே உள்ள சுத்திகரிப்பு மையம் அருகில், இடம் தேர்வு செய்யப்பட்டது. அந்த இடத்தில் இருந்த, 17 ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப்பட்டன.
தொடர்ந்து, புதிய சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணி துவங்கியது. ஆனால், அப்பணி மேற்கொண்டு தொடராமல் அப்படியே நின்று விட்டது. பணியை எடுத்த ஒப்பந்ததாரரிடம், நகராட்சி நிர்வாகம் பல முறை கேட்டும் பணியை துவக்கவில்லை.
இதையடுத்து, நவீன சுத்திகரிப்பு மையம் கட்டுமான பணியை எடுத்த ஒப்பந்ததாரருக்கு வழங்கப்பட்ட பணி ஆணையை, திருவள்ளூர் நகராட்சி நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது.
இதுகுறித்து, நகராட்சி தலைவர் உதயமலர் கூறியதாவது:
திருவள்ளூர் நகரில் அமைக்கப்பட்ட பாதாள சாக்கடைத் திட்டத்தில், அதிகபட்சம், 8,000 வீடுகளுக்கு மட்டுமே இணைப்பு வழங்க முடியும். தற்போது, 16,000திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் உருவாகி உள்ளன. இதுவரை, 7,000 வீடுகளுக்கு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
தற்போது, பாதாள சாக்கடை கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்தை நவீனப்படுத்த, 10.48 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, அதற்கான பணியானையும் வழங்கப்பட்டது.
பணியை எடுத்தவர்கள் அதை குறிப்பிட்ட காலத்திற்குள் செய்து முடிக்காததால், பணி ஆணை ரத்து செய்யப்பட்டு உள்ளது. மீண்டும், புதிய ஒப்பந்தம் வரும், 24ம் தேதி கோரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
அரசு நிர்ணயிக்கும் தொகையில் பணியை எடுக்கும் ஒப்பந்ததாரருக்கு, ஏழு மாதத்திற்குள் நவீன சுத்திகரிப்பு மையம் அமைக்க அனுமதி வழங்கப்படும். இப்பணி நிறைவடைந்ததும், திருவள்ளூர் நகரில் பாதாள சாக்கடையில் அடைப்பு இருக்காது. மேலும், சுத்திகரிப்பு மையத்தில் இருந்து சுத்தமான தண்ணீராக வெளியேற்றப்படுவதால், புட்லுார் ஏரியும் மாசு அடையாது.
இவ்வாறு அவர் கூறினார்.