/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருட்டு புகார்: துாய்மை பணியாளர்களிடம் விசாரணை மீஞ்சூர் பேரூராட்சியில் சக ஊழியர்கள் போராட்டம்
/
திருட்டு புகார்: துாய்மை பணியாளர்களிடம் விசாரணை மீஞ்சூர் பேரூராட்சியில் சக ஊழியர்கள் போராட்டம்
திருட்டு புகார்: துாய்மை பணியாளர்களிடம் விசாரணை மீஞ்சூர் பேரூராட்சியில் சக ஊழியர்கள் போராட்டம்
திருட்டு புகார்: துாய்மை பணியாளர்களிடம் விசாரணை மீஞ்சூர் பேரூராட்சியில் சக ஊழியர்கள் போராட்டம்
ADDED : ஜன 05, 2025 02:12 AM

மீஞ்சூர்:மீஞ்சூர் பேரூராட்சியில், பொறியாளர் பிரிவு அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராஜேஷ், 32; இவர், கடந்த மாதம், 27ம் தேதி, ஆரணியில் உள்ள இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் தன்னுடைய வங்கி கணக்கில் இருந்து, 6 லட்சம் ரூபாய் பணத்தை எடுத்து உள்ளார்.
அதை, தன் பேட்டரியில் இயங்கும் இருசக்கர வாகனத்தில் சீட்டுக்கு அடியில் வைத்துக் கொண்டு, அலுவலகம் வந்தார். பேரூராட்சி அலுவலகத்தில், துாய்மை பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பேட்டரி வாகனங்களுக்கு சார்ஜ் போடும் இடத்தில், தன் பைக்கையும் நிறுத்தி, சார்ஜ் போட்டுவிட்டு பணிக்கு சென்றார்.
அவசர வேலையாக அதிகாரிகளுடன் வெளியில் சென்றுவிட்டு, மாலையில் அலுவலகம் வந்து, தன் பைக்கை பார்த்தபோது, அதில் இருந்து, பணம் திருடு போயிருப்பது தெரிந்தது.
அதையடுத்து ராஜேஷ், மீஞ்சூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தை தொடர்ந்து, போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
அங்குள்ள, 'சிசிடிவி' கேமராக்களை ஆய்வு செய்தபோது, துாய்மைப் பணியாளர்கள் சிலர் அங்கு வந்து சென்றது தெரிந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு, மீஞ்சூர் போலீசார் துாய்மை பணியாளர்கள் இருவரை வீட்டிற்கு சென்று, விசாரணைக்காக அழைத்து சென்றனர்.
இது குறித்து, நேற்று காலை, பணிக்கு வந்த சக பணியாளர்களுக்கு தெரிய வந்தது. இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, 100க்கும் மேற்பட்ட துாய்மை பணியாளர்கள், தங்களது பணிகளை புறக்கணித்து, பேரூராட்சி அலுவலகம் முன் கூடி, போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பேரூராட்சி செயல் அலுவலர் மகேஸ்வரி மற்றும் போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தினர்.
விசாரணைக்கு அழைக்கும்போது, துாய்மை பணியாளர்கள் காவல் நிலையத்திற்கு வரவேண்டும் என, எழுத்துப்பூர்வாக எழுதி பெற்று, பின் அவர்களை போலீசார் விடுவித்தனர்.
அதையடுத்து, துாய்மை பணியாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர். துாய்மை பணியாளர்கள் போராட்டதால், காலை நேரத்தில் துாய்மை பணிகள் பாதிக்கப்பட்டன.