/
உள்ளூர் செய்திகள்
/
திருவள்ளூர்
/
திருத்தணியில் துணைமின் நிலையம் அமைவதில்...சிக்கல்!:
/
திருத்தணியில் துணைமின் நிலையம் அமைவதில்...சிக்கல்!:
திருத்தணியில் துணைமின் நிலையம் அமைவதில்...சிக்கல்!:
திருத்தணியில் துணைமின் நிலையம் அமைவதில்...சிக்கல்!:
ADDED : பிப் 29, 2024 01:36 AM
திருத்தணி:திருத்தணி அருகே சின்னகடம்பூர் பகுதியில், 230 கி.வோ., துணைமின் நிலையம் அமைப்பதற்கு போதிய அரசு நிலம் இருந்தும், அங்கு செல்வதற்கு, 40 மீட்டர் நீளத்திற்கு சாலை வசதி இல்லாததால் பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், அலமாதி மற்றும் பஞ்செட்டி ஆகிய பகுதிகளில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த மோசூர் கிராமத்தில், 400 கி.வோ., துணைமின் நிலையத்திற்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது.
மேலும், இங்கிருந்து அரக்கோணம், சோளிங்கர், திருத்தணி, கே,ஜி.கண்டிகை, அத்திமாஞ்சேரிப்பேட்டை உட்பட, 13 ஊர்களில் உள்ள 110 கி.வோ., துணைமின் நிலையங்களுக்கு மின் வினியோகம் செய்யப்படுகிறது.
மின் இணைப்பு
திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆறு, 110 கி.வோ. துணைமின் நிலையங்களில், 21,000 விவசாய கிணறுகளுக்கு மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர, ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் கடைகள் மற்றும் 50க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், மின்வினியோக பற்றாக்குறையால் குறைந்தழுத்த மின்சாரம், அடிக்கடி மின்தடை போன்ற பல்வேறு பிரச்னைகளால் மின்நுகர் வோர்கள் கடும் சிரமப்பட்டு வந்தனர்.
இதையடுத்து, திருத்தணி மின்வாரிய கோட்ட செயற்பொறியாளர் 2017ம் ஆண்டு திருத்தணியில், 230 கி.வோ., திறன் கொண்ட துணைமின் நிலையம் அமைக்க போதிய நிலம் வழங்க வேண்டும் என, வருவாய்த் துறையினரிடம் மனு அளித்தனர்.
அனுமதி
தொடர்ந்து, வருவாய்த் துறையினர் திருத்தணி ஒன்றியம் சின்னகடம்பூர் கிராமம் அருகே 8 ஏக்கர் பாறை புறம்போக்கு நிலத்தை மின்வாரியத்திற்கு வழங்குவதாக உறுதி கூறினர். மேலும், மாவட்ட கலெக்டரும் மேற்கண்ட அரசு நிலத்தில் துணைமின் நிலையம் அமைப்பதற்கு அனுமதி வழங்கினார்.
ஆனால், அந்த 8 ஏக்கர் நிலத்திற்கு செல்வதற்கு, மாநில நெடுஞ்சாலையில் இருந்து, 40 மீட்டர் நீளத்திற்கு தனிநபர் ஒருவர் நிலத்தின் வழியாக தான் சாலை அமைத்துச் செல்ல வேண்டும்.
இந்நிலையில், தனிநபரும் மின்வாரியத்திற்கு நிலம் கொடுப்பதற்கு தயாராக இருந்த போதிலும், அப்பகுதியைச் சேர்ந்த சிலர், நிலத்தை கொடுக்கக்கூடாது என, அவரை மிரட்டி வருகின்றனர்.
இதனால், இடப்பிரச்னை காரணமாக, நான்கு ஆண்டுகளுக்கு மேலாக துணைமின் நிலையம் அமைவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
தடையின்றி மின்சாரம்
இதுகுறித்து திருத்தணி மின்வாரிய அதிகாரி கூறியதாவது:
கூடுதல் தலைமை பொறியாளர், சின்னகடம்பூர் பகுதியில் துணைமின் நிலையம் அமைப்பதற்காக, தனிநபருக்கு அரசு வழங்கவுள்ள நிலம் குறித்து உரிய கோப்புகள் தயாரித்து மாவட்ட கலெக்டரிடம் கொடுத்து உள்ளார்.
கலெக்டரும் 8 ஏக்கர் நிலம் வழங்குவதற்கு சம்மதம் தெரிவித்து, துணைமின் நிலையம் அமைத்துக் கொள்ளலாம் எனக் கூறியுள்ளார். ஆனால், இந்த வழி பிரச்னையால் துணைமின் நிலையம் அமைவதில் காலதாமதம் ஆகிறது.
துணைமின் நிலையம் அமைத்தால், திருத்தணி வருவாய் கோட்டத்தில் உள்ள ஆறு துணைமின் நிலையத்தில் தடையின்றி மின்சாரம் வினியோகம் செய்ய முடியும்.
மேலும் விவசாயிகளுக்கு கூடுதல் மின் இணைப்பு வழங்க முடியும். எனவே, வருவாய்த் துறை அதிகாரிகள் இடப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தால், உடனடியாக துணைமின் நிலையம் கட்டும் பணிகள் துவங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருத்தணி வருவாய் கோட்டாட்சியர், சம்பந்தப்பட்ட தனிநபரை அழைத்து பேசி, நிலம் கையகப்படுத்தி மின்வாரியத்திற்கு ஒப்படைக்க வேண்டும்
விவசாயிகளுக்கு வரப்பிரசாதம்
மோசூர் துணைமின் நிலையத்தில் இருந்து துணைமின் நிலையத்திற்கு மின்வினியோகம் செய்யப்படுவதால், குறைந்தழுத்த மின்சாரம் வருவதால், மின்மோட்டார்களை இயக்க முடியாமல் சிரமப்படுகிறோம். மேலும் பகல், இரவு என நான்கு மணி நேரம் மட்டுமே விவசாய கிணறுகளுக்கு மும்முனை மின்சாரம் வழங்கப்படுகிறது. இதனால், பயிர்களுக்கு குறித்த நேரத்தில் தண்ணீர் பாய்ச்ச முடியாமல் சிரமப்படுகிறோம். சின்னகடம்பூர் பகுதியில் துணைமின் நிலையம் அமைவது விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும்.
வேணுகோபால்,
திருவள்ளூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர்,
நொச்சிலி.

